ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை


ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உயர்மட்டக் குழு கூட்டம் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 13 Sep 2018 9:45 PM GMT (Updated: 13 Sep 2018 9:28 PM GMT)

அ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது.

சென்னை, 

அ.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வழிகாட்டி குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், அ.தி.மு.க.வில் வழிகாட்டி குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, விரைவில் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 3 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நீக்கம் செய்யப்பட்டது குறித்த தீர்ப்பின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தில் கட்சி ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் அ.தி.மு.க.வில் ஒரு சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story