தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்


தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 6:48 PM GMT)

‘ஆன்-லைன்’ மூலம் இல்லாமல் டெண்டர்கள் நேரடியாக பெறப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ஆன்-லைன்’ டெண்டருக்கு பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்ற முதல்-அமைச்சர் இப்போது, ஆன்-லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாக பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை பராமரிப்பு மற்றும் கட்டுமான வட்டார அலுவலகத்தில் ரூ.70 கோடிக்கு மேல் உள்ள 3.9.2018-ம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான 21.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகத்தில் ரூ.140 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும் ஆன்-லைனில் பெறப்படாமல் நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.

உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி உதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்து விட்டு தடுமாறும் ஒரு முதல்-அமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு.

ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், ரூ.310 கோடிக்கும் மேற்பட்ட டெண்டர்களை ஆன்-லைனுக்குப் பதில் நேரடியாகப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களை கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் முதல்-அமைச்சர் என்பது சகித்துக் கொள்ள முடியாத சாபக்கேடு.

டெண்டர்களை நேரடியாக பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாக பெறும் முறையை உடனடியாக கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களை பெற வேண்டும்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும்.

அதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story