வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?


வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:02 PM GMT)

வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழக அரசின் தலைமை மின் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மின் விபத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்து தமிழக அரசின் தலைமை மின் ஆய்வாளர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை வெளியிட்டு விளக்கம் அளித்து உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

* மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

* மின்சார ‘பிளக்கு’களை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் ‘சுவிட்சை ஆப்’ செய்துவிட வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று ‘பின்’ உள்ள ‘பிளக்கு’கள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

மின்கம்பங்கள்

* டி.வி. ஆன்டெனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.

* மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

* மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லக்கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின்னலின்போது...

* மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

* மின்சார தீ விபத்துக்களுக்கு உண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க கூடாது. தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை அணைத்திட வேண்டும்.

* மின்சார பெட்டி அருகே தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.

* மின்னல் ஏற்படும்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது. கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சம் அடையலாம்.

எங்கே நிற்கக்கூடாது?

* மின்னல் ஏற்படும்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடையக்கூடாது. தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் நிற்கக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகேயும் நிற்கக்கூடாது.

* மழை நேரத்தில் மின்னல் ஏற்படும் சமயத்தில் டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் செல்போன் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story