பழனி சண்முகநதி ஆற்றில் கொங்குசேர மன்னர் கால நாணயம் கண்டுபிடிப்பு


பழனி சண்முகநதி ஆற்றில் கொங்குசேர மன்னர் கால நாணயம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 7:30 PM GMT)

பழனி சண்முகநதி ஆற்றில் கொங்கு சேர மன்னர் கால நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பழனி,

பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, நாணய சேகரிப்பாளர் சுகுமார்போஸ் ஆகியோர் சண்முகநதி ஆற்றில் கொங்கு சேர மன்னர் காலத்து அரியவகை நாணயத்தை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

பழனி சண்முகநதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயம் செம்பினால் ஆனது. இந்த நாணயம் ஒழுங்கற்ற வட்ட வடிவமாக உள்ளது. நாணயத்தின் ஒருபக்கத்தில் கொங்கு சேர அரசின் முத்திரை பொறிக்கப்பட்டு உள்ளது. இடது பகுதியில் வில்லும், அதற்கடுத்து யானையும், பனைமரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த அடையாளங்கள் பண்டைய சேர அரசின் முத்திரைகளாகும். நாணயத்தின் மேல்பகுதியில் மங்களவிளக்கு உள்ளது. ஓரங்களில் 8 வட்டப்புள்ளிகள் உள்ளன. நாணயத்தின் மறுபக்கத்தில் பலிபீடத்தின் குறுக்காக வைக்கப்பட்ட 2 வாள்கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகள் உள்ளன. மேலும் 9 வட்டப்புள்ளிகள் உள்ளன.

சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டு வந்த சேர மன்னர்கள் கொங்கு சேரர்கள் என்று அழைக்கப்பட்டனர். கொங்கு சேர மன்னர்களின் நாணயம் அரிதாகவே கிடைக்கின்றன. தற்போது கிடைத்து இருக்கும் இந்த நாணயம் ஒரு அரியவகையை சேர்ந்தது ஆகும்.

பொதுவாக கொங்கு சேரர்களின் நாணயங்களில் யானை உருவத்தை காண்பது அரிது. இந்த நாணயம் எந்த மன்னரின் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கி.பி. 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொடுங்களூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ரவிவர்ம குலசேகர பெருமானின் நாணயமாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story