மாநில செய்திகள்

வங்கி, நிதி நிறுவன மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? அதிகாரிகள் அறிவுரை + "||" + How to get rid of bank and financial frauds

வங்கி, நிதி நிறுவன மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? அதிகாரிகள் அறிவுரை

வங்கி, நிதி நிறுவன மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? அதிகாரிகள் அறிவுரை
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடி கும்பல் பணம் சுருட்டி விடுகின்றனர்.
அடையாறு, 

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாக கூறி மோசடி கும்பல் பணம் சுருட்டி விடுகின்றனர். எனவே அவர்களிடம் இருந்து தப்புவது எப்படி என தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி கமிஷன் தொகை, காப்பீட்டு பிரீமியம் என பல வகைகளில் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மோசடியில் பாமரர் முதல் படித்தவர் வரை என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த மாதம் ஈரோட்டை சேர்ந்த ஒரு தனியார் பால்பண்ணை நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 கோடி வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி, ரூ.1 கோடியை பறித்துச்சென்றது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், 6 பேர் கொண்ட மோசடி கும்பல் ஒன்று சென்னையில் கடந்த வாரம் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு காப்பீட்டு பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி சுமார் 500 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 பேர் அளித்த புகாரின் பேரில் அந்த கும்பலை சேர்ந்த குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், அவர்கள் தியாகராயநகர் மற்றும் ஆவடியில் அலுவலகம் அமைத்து இருந்ததும், அதில் 40 பெண்களை மாத சம்பளத்துக்கு பணி அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த பெண்கள், செல்போன் எண்களை ரேண்டமாக தேர்ந்தெடுத்து, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் பெற்றுத்தருவதாக கூறுகின்றனர்.

அப்போது கடன் தேவை என கூறும் நபர்களிடம் இந்த 6 பேரில் ஒருவர் தொடர்ந்து பேசி, சில நாட்கள் கழித்து, கடன் தொகையை பெற காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும் என கூறி ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்த சொல்கின்றனர். பணம் செலுத்தப்பட்ட உடன் அந்த செல்போன் எண்ணை பிளாக் செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த கும்பல் பல்வேறு பெயர்களில் 27 போலி நிறுவனங்கள் நடத்தி வந்தது. பல்வேறு வங்கிகளில் இருந்த இவர்களின் 14 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. வாடிக்கையாளர் கேட்கும் கடன் தொகையை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பலரிடம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

எனவே வங்கி மற்றும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பலிடம் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். கடன் வழங்குவதற்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்து பிரபல தனியார் நிதி நிறுவன அதிகாரி உப்பேந்திரன் கூறியதாவது:-

நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மற்றும் டி.எஸ்.ஏ.க்கள், கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் வழங்கிய உடன் அவர்களது பணி 90 சதவீதம் முடிவடைந்து விடும்.

அதன்பிறகு நிதி நிறுவன அலுவலர்கள் தான் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று, விண்ணப்ப படிவங்களை பெறுவதுடன், அவரது முகவரி, அடையாள சான்றுகள், வங்கி வரவு-செலவு அறிக்கை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை பெறுவார்கள்.

ஆவணங்கள் ஆய்வு

மேலும், வாடிக்கையாளரின் வசிப்பிடம், அலுவலகம் அல்லது தொழில் செய்யுமிடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்வார்கள். இதன் பிறகு வாடிக்கையாளரின் ஆவணங்களை ஆய்வு செய்து தகுதி அடிப்படையில் எவ்வளவு கடன் வழங்கலாம் என கிரெடிட் குழு தீர்மானித்து ஒப்புதல் வழங்கும்.

இந்த ஒப்புதல் அடிப்படையில் நிறுவன லெட்டர் ஹெட்டில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, கடன் வகை, கடன் தொகை, வட்டி சதவீதம், திரும்ப செலுத்தும் கால அளவு, தவணைத் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய கடன் அனுமதி கடிதம் மேலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்படும்.

இந்த கடிதத்தில் வாடிக்கையாளர் சம்மதித்து கையெழுத்திட்டு, கடனை தவணைக்கு பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கிய பிறகே வாடிக்கையாளருக்கு கடன் தொகை காசோலையாகவோ அல்லது அவரது வங்கிக்கணக்கிலோ வரவு வைக்கப்படும். ஒரு வாடிக்கையாளரின் ஆவணங்கள், மற்றும் கிரெடிட் ஸ்கோர் தகுதியாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய கடன் நடைமுறைகளுக்கு குறைந்தது 5 வேலை நாட்கள் தேவைப்படும்.

ஆவணங்களை கொடுத்த ஒரே நாளில் எந்த நிதி நிறுவனத்தாலும் கடன் வழங்க முடியாது. எனவே கமிஷன் தொகை, காப்பீட்டு தொகை செலுத்தினால் கடன் கிடைக்கும் என யாரேனும் ஆசைவார்த்தைகள் கூறினால் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலகி இருக்க வேண்டும்

தனியார் வங்கியின் கிரெடிட் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அனைத்து வகையான கடனுக்கும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. கடன் பெற அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்து, ஒருவர் கடன் பெற தகுதியுடையவராக இருக்கும்பட்சத்தில், கடன் தொகை கைக்கு வர குறைந்தது 5 முதல் 7 நாட்கள் ஆகும்.

எனவே, ஓரிரு நாட்களில் கடன் பெற்று தருவதாக கட்டணம், கமிஷன் தொகையை முன்கூட்டியே கட்டும்படி கூறும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் விலகி இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களின் தகவல்கள் மற்றும் முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை வழங்குவது ஆபத்தானது.

இந்த தகவல்களையும், ஆவணங்களையும் இதுபோன்ற மோசடி கும்பல் சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்தால் தான் இதுபோன்ற மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.

அதே வேளையில், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...