மாநில செய்திகள்

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் 5 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு + "||" + Vinayagar idols are in procession in Chennai

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் 5 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் 5 இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு
சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சென்னை, 

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 5 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 13-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நகரில் பொது இடங்களில் 2 ஆயிரத்து 520 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

அதன்படி இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கலாம் என்று போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி கோவில் நிர்வாகங்கள், வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்துள்ளன.

செங்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால், சென்னையில் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் வாகனங்களில் போலீசாரும் பயணிக்க உள்ளனர். ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் அதிரடி படை போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட உள்ளனர்.

ஊர்வலம் தொடங்கியவுடன் மெரினா கடற்கரையில் போக்குவரத்தை நிறுத்தம் செய்து, மாற்று வழியில் வாகனங்களை அனுமதிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரை பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கரைக்கப்படும் என்பதால், அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விநாயகர் சிலைகளை தூக்கி கடலில் கரைப்பதற்காக 80 டன், 40 டன் எடைகளை தாங்க கூடிய 2 ராட்சத கிரேன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலில் யாரும் இறங்கிடாத வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் மின் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.