கும்பகர்ணனை போன்று தூங்காமல் கோர்ட்டு உத்தரவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கும்பகர்ணனை போன்று தூங்காமல் கோர்ட்டு உத்தரவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:08 PM GMT)

கும்பகர்ணனை போன்று தூங்காமல், கோர்ட்டு உத்தரவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசு பொது நூலகத் துறையையும், மாவட்ட நூலகத் துறையும் இணைத்து 1989-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை, மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயம், மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு, பதவி உயர்வுக்கான விதிகளை வகுக்க அறிவுறுத்தியது.

இதற்கிடையே, நூலகத் துறையில் பணியாற்றிய மணிகண்டன், அசோகன், மாதேஸ்வரன் உள்பட 4 பேரை கல்வித்துறைக்கு மாற்றி அந்தத்துறையில் மாவட்ட நூலக அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தீர்ப்பாய உத்தரவு அடிப்படையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு விதிகளை வகுத்த தமிழக அரசு, அதன் அடிப்படையில், மாவட்ட நூலக அதிகாரிகளாக பணியாற்றிய மணிகண்டன் உள்பட 4 பேரையும், நூலகத்துறையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர்கள் 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறையில் மாவட்ட நூலக அதிகாரிகளாக பணியாற்றி வந்த மனுதாரர்களை நூலகத்துறையில் நூலகர்களாக மாற்றி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தீர்ப்பாய உத்தரவின்படி குறித்த காலத்தில் பதவி உயர்வுக்கான விதிகளை வகுத்திருந்தால் இந்த வழக்குகள் வந்திருக்காது. கோர்ட்டு நேரமும் வீணடிக்கப்பட்டு இருக்காது.

வரும் காலத்திலாவது தமிழக அரசு கும்பகர்ணனை போன்று தூங்கிக் கொண்டிருக்காமல், கோர்ட்டு உத்தரவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

17 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு விதிகளை வகுத்ததால் தேவையில்லாமல் கோர்ட்டை நாடவேண்டிய நிலை ஏற்பட்ட மனுதாரர்களுக்கு தமிழக அரசு வழக்கு செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story