ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் கவர்னர் மாளிகை அறிவிப்பு


ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் கவர்னர் மாளிகை அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2018 12:29 AM GMT (Updated: 16 Sep 2018 12:29 AM GMT)

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரம் சிக்கலான பிரச்சினை என்பதால், அரசியல் சட்டப்படி ஆய்வு செய்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அறிவித்து உள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந் தேதி அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து 9-ந் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்பியது.

தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து கவர்னர் மாளிகையின் சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அனுமானத்தின் அடிப்படையில் சில தனியார் தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை (7 பேரின் விடுதலை) சிக்கலான ஒன்றாகும். இதில் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் சாசன அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. பல்வேறு கோர்ட்டு தீர்ப்புகள் அடங்கிய அந்த ஆவணங்களை 14-ந் தேதியன்றுதான் மாநில அரசு ஒப்படைத்தது. மேலும் பல ஆவணங்களை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆவணங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து மேல்நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த பணியில் தேவைப்படும் போது ஆலோசனைகள் பெறப்படும். இந்த விஷயத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story