பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியது


பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 16 Sep 2018 1:32 AM GMT (Updated: 16 Sep 2018 1:32 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் 84 ரூபாய் 49 காசுகள் என்று இருந்தது. நேற்று மீண்டும் லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 85 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை ரூ.85-ஐ தாண்டிவிட்ட நிலையில் வாகனஓட்டிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி ஏற்றி வரும் லாரிகள் ஏற்கனவே தங்களுடைய வாடகை கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஆனாலும் வியாபாரிகள் இன்னும் காய்கறி விலையில் மாற்றம் செய்யவில்லை. எப்போது வேண்டுமானாலும் காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story