‘அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம்’ சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்


‘அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம்’ சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Sep 2018 12:00 AM GMT (Updated: 18 Sep 2018 10:47 PM GMT)

அ.தி.மு.க. ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகுவோம் என சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒட்டுமொத்த தமிழக மக்களும் தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உணர்வோடு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. என்கிற கொள்ளையர்களிடம் இருந்து இந்த தமிழ்நாட்டை மீட்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க.வுக்கு உண்டு. அதன் தொடக்கம்தான் இந்த ஆர்ப்பாட்டம். தமிழக வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் ஆட்சியை, தமிழக மக்கள் இதுவரை கண்டதே இல்லை. ஒரு ஊழல் அரசாக, ஒரு அடிமை அரசாக, ஒரு எடுபிடி அரசாக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியை ஏற்படுத்திய தமிழக மக்கள் இப்போது விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பல்வேறு வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

அகில இந்திய அளவில் ஊழல் கரை படிந்திருக்கக்கூடிய ஒரு அமைச்சரவை இருக்கிறது என்று சொன்னால், எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி தான். நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய ஊழலை விசாரியுங்கள் என்று தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சென்று புகார் கொடுக்க போனால், அந்த துறையின் அதிகாரி பாலியல் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி மீதான புகாரை விசாரியுங்கள் என்று டி.ஜி.பி.யை பார்க்க போனால், அந்த டி.ஜி.பி ராஜேந்திரன் குட்கா ஊழலில் சிக்கி கொண்டிருக்கிறார். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட ஊழல் குறித்து, விசாரியுங்கள் என்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்போனால், காண்டிராக்ட் ஊழலில் சிக்கி கோர்ட்டு விசாரணைக்கு நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் வந்திருக்கிறார்.

பருப்பு கொள்முதல் ஊழல், அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் ஊழல், ஆம்னி பஸ் வாங்குவதில் ஊழல், முட்டை டெண்டரில் ஊழல், வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என்று முதல்-அமைச்சரோடு சேர்த்து 33 அமைச்சர்களும் ஊழல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சிறந்த ஊழல் நாயகர்கள் என்ற தேர்வு போட்டி நடத்தினால், அமைச்சரவையில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அங்கே இருக்கக்கூடிய 33 அமைச்சர்களும் அந்த போட்டியில், நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போடக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நிலை உள்ளது.

அவர்களுக்கு தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், துணிவு இருந்தால் என் மீது வழக்கு போடட்டும். அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கக்கூடிய செய்யாத்துரை, நாகராஜன் ஆகியோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது. 180 கோடி கட்டுக்கட்டாக பணம், 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. யார் இந்த செய்யாத்துரை? யார் இந்த நாகராஜன்? வேறு யாருமில்லை. வெங்கடாஜலபதி அண்ட் கோ என்ற நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர்கள்.

இந்த வெங்கடாஜலபதி அண்ட் கோ யாருடையது தெரியுமா? எடப்பாடி பழனிசாமி மகனின் மாமனார் பி.சுப்பிரமணியத்தின் நிறுவனம். தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் உள்ளது நெடுஞ்சாலைத்துறை. அந்த துறையில் விடப்படும் கோடிக்கணக்கான டெண்டர் ஒப்பந்தங்கள் அத்தனையும் அவருடைய சம்பந்தி சுப்பிரமணியத்திற்கு போகிறது. இந்த செய்யாதுரை, நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் பங்குதாரராக இருக்கும் 3 நிறுவனங்களுக்கு 3 ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து உண்மையான விசாரணை நடைபெறும் போது பூதாகரமான ஊழல்கள் எல்லாம் வெளிவரப் போகிறது.

இதேபோன்று அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் ஊழல் செய்து இருக்கிறார்கள்.

இந்த கொள்ளைகளை எல்லாம் பிரதமர் மோடி தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. ஏனென்றால், அடிக்கிற கொள்ளையிலே 1 சதவீதம் டெல்லிக்கு கப்பம் கட்டுகிறார்கள். அதனால் தான், மோடி வாய் திறக்காமல் இருக்கிறார். இதுதான் உண்மை.

நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். நான் ஏதோ பயந்துகொண்டோ, அச்சப்பட்டு கொண்டோ, நம்மை கொண்டு சிறையில் போட்டு விடுவார்களோ, நம் மீது வழக்கு வந்திருமோ என்று அஞ்சவில்லை.

இந்த ஊழலை எல்லாம் தடுக்க வேண்டும், அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் லோக் ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்தோம். அந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, அந்த அமைப்பு இன்னும் அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினால் முதலில் சிறைக்கு போவது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தான்.

எனவே, முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அவருடைய வாரிசுகள், அவருடைய உறவினர்கள், அவருடைய பினாமிகள், அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கக்கூடிய சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் இவர்கள் எல்லாம் யார் யார் என்பதை நாங்கள் ரகசியமாக கண்காணித்து கொண்டிருக்கிறோம்.

பட்டியல் எங்களிடம் வந்துவிட்டது. எவ்வளவு வாங்கியிருக்கிறீர்கள்? ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் எவ்வளவு கொடுக்கிறீர்கள்? அந்த பணம் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி கொண்டிருக்கிறார்கள், எந்தெந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் துணைபோகிறார்கள் என்ற விவரத்தை தயாரித்து விட்டோம். விரைவில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கரன்சியை எண்ணியவர்கள் கம்பி எண்ணக்கூடிய சூழலை ஏற்படுத்துவோம்.

சேதுசமுத்திர திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது போன்று, சேலம் 8 வழிச்சாலையை பொறுத்தவரைக்கும் விவசாயிகள், குடியிருப்போர், ஏழை-எளியோர் பாதிக்கப்படாத வகையிலே மாற்றுப்பாதையில் நிறைவேற்றுங்கள் என தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காரணம், அது 10 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர். அந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டரிலே எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்று ஏற்கனவே, பேரம் பேசி வைத்திருப்பதால் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

தமிழகத்தில் நடைபெறக்கூடிய ஆட்சி ஆட்சியல்ல, கஜானாவை கொள்ளையடிக்கக்கூடிய கம்பெனிகளை எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கு இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு, நாம் தயாராகயிருக்கிறோம், மேலும் தயாராகுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story