தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை எதிர்த்து பா.ம.க. போராட்டம்


தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை எதிர்த்து பா.ம.க. போராட்டம்
x
தினத்தந்தி 19 Sep 2018 11:51 PM GMT (Updated: 19 Sep 2018 11:51 PM GMT)

‘தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளை மூடும் அரசின் முடிவை எதிர்த்து பா.ம.க. போராடும்’ என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வி துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட சீர்திருத்தங்களை தமிழக அரசு திரும்ப பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சீரமைத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் 3 ஆயிரம் பள்ளிகளை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

உயர்கல்வித்துறையில் 4,242 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது.

நடப்பாண்டில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. தமிழகம் மின்மிகை மாநிலம் என அரசு கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு நீடிக்கிறது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்ற 3-வது நீதிபதியின் தீர்ப்பு அடுத்த வாரம் வர உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிடவேண்டும். 2016-17-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் கவர்னரிடம் கொடுத்த ஊழல் புகார்கள் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. 2018 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 15 வகையான ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இதையும் கவர்னரிடம் பா.ம.க. நேரில் சென்று கொடுப்போம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி 15 நாட்களுக்குமேல் ஆகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்காதது வேதனை அளிக்கிறது. அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று வருகிற அக்டோபர் 2-ந் தேதி 7 பேரையும் விடுதலை செய்ய நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முன்வரவேண்டும்.

தமிழகத்தில் மணல் கொள்ளை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாமக்கல், கரூர் மாவட்டம் தொடங்கி விழுப்புரம் மாவட்டம் வரை மணல் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது. மணல் கொள்ளைக்கு துணை போனதாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது. விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்பு என்ற பெயர்களில் புதிய அமைப்புகளை ஏற்படுத்தி மாவட்ட கலெக்டரிடம் ஆலையை திறக்க மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அமைக்கப்பட்ட மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் வருகிற 22-ந் தேதி முதல் ஆய்வு நடைபெற உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் ஆலையால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை என கூறி ஆலையை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.


Next Story