புதிய தனியார் கலைக்கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம்


புதிய தனியார் கலைக்கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம்
x
தினத்தந்தி 20 Sep 2018 12:06 AM GMT (Updated: 20 Sep 2018 12:06 AM GMT)

புதிய தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

கடந்த சில வருடங்களாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு போதுமான வரவேற்பு இல்லை. காரணம் என்ஜினீயரிங் படித்தால் முன்பு போல வேலை இல்லை. கைநிறைய சம்பளமும் இல்லை. அதன் காரணமாக கலை அறிவியல் படிப்புகளில் பலர் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

குறிப்பாக பி.காம் போன்ற படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மாணவர்கள் பிளஸ்-2 படிக்கும்போதே கலைக்கல்லூரிகளில் சேர ஆயத்தமாகிறார்கள். இதன் காரணமாக பல என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

இதனால் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாறி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ராம.சீனுவாசன் ஒரு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான புதிய இணைப்பு பாடங்கள், கூடுதல் பிரிவுகள், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில் கல்லூரிகள் (மேலாண்மை நிறுவனங்கள்-முதுநிலை மேலாண்மை(எம்.பி.ஏ.) கணினி பயன்பாடு மட்டும்) தொடங்குவதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு அபராதத்தொகையுடன் டிசம்பர் 10-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் ஒவ்வொரு புதிய பாடம் அல்லது புதிய பிரிவுக்கு ரூ.15 ஆயிரமும், புதிதாக கல்லூரி தொடங்க ரூ.30 ஆயிரமும் அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பகுதியில் மூடப்பட்ட பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க பலர் விண்ணப்பிக்கலாம் என தெரிகிறது.

Next Story