”மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் ” பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம்


”மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் ” பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம்
x
தினத்தந்தி 20 Sep 2018 3:53 PM GMT (Updated: 20 Sep 2018 3:53 PM GMT)

மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. 

அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைந்து கையெழுத்திட வேண்டும் எனப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி கொள்ளும் சிலர் குழுவாக செயல்படுகிறார்கள். அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்க்கிறார்கள். 

அவர்களின் விடுதலையை எதிர்ப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என் மகன் விடுதலையை எதிர்ப்பவர்கள் ஒரு நிமிடம்  சிந்தியுங்கள்.

 28 வருடங்கள் பேரறிவாளன் சிறையில் இருந்து விட்டதாகவும், மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Next Story