மாநில செய்திகள்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது + "||" + MPs on MLAs To investigate criminal cases Donechard is set in Chennai

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் நேற்று தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. முதலாவதாக, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சென்னை,

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லியைச் சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக தனிக்கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கட்டளையிட்டது.

மேலும் இது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஒரு தனிக்கோர்ட்டும், டெல்லியில் 2 தனிக்கோர்ட்டுகளும் என மொத்தம் 12 தனிக்கோர்ட்டுகள் அமைக்கப்பட்ட தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 178 எம்.பி., எம்.எல். ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன. இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன.

தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல் தெரியவந்து இருக்கிறது.

தமிழகத்தில் தனிக்கோர்ட்டு அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டின் நீதிபதியாக ஜெ.சாந்தியை நியமித்து, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் உத்தரவிட்டார்.

இந்த தனிக்கோர்ட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் தனிக்கோர்ட்டை திறந்துவைத்தார்.

இந்த விழாவில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.பி.முரளிதரன், ஜெகதீஷ் சந்திரா, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல் சங்க தலைவர் நளினி மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தனிக்கோர்ட்டு அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல், குற்றம் மற்றும் தேர்தல் தகராறு தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை இனி இந்த தனிக்கோர்ட்டு விசாரிக்கும்.

முன்பு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நில மோசடிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவரை விமர்சித்து பேசியதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. சார்பில் அப்போது புகார் மனு அளிக்கப்பட்டது.

தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு முதல் வழக்காக நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சாந்தி பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்
கோவையில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.