ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை


ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை
x
தினத்தந்தி 21 Sep 2018 8:08 PM GMT (Updated: 21 Sep 2018 8:08 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது அனிச்சை செயலாக மாற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், கார்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஐகோர்ட்டு அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

இருசக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பான்மையினர் ஹெல்மெட் அணிவதை தலையாயக் கடமையாக கருதி பின்பற்றுவதையும், குறைந்த எண்ணிக்கையிலானவர்களிடையே ஹெல்மெட் அணிவதற்கு எதிரான முணுமுணுப்புகள் இருப்பதையும் நான் அறிவேன். ஆனால், அவை ஏற்கத்தக்கதல்ல.

சாலை விபத்துகளில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஹெல்மெட் அணிவதிலும், சீட் பெல்ட் அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் 4,091 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் இது 2,956 ஆக குறைந்தது. இதை மேலும் குறைக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும்.

அலுவல் மற்றும் வேறு காரணங்களுக்காக வீட்டைவிட்டு வாகனங்களில் புறப்படுவோர் தங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவி, குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் ஹெல்மெட் அணிவதும், சீட் பெல்ட் அணிவதும் அனிச்சை செயலாக மாறிவிடும். இந்த விஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இனி வெளியில் செல்லும் போது காலணி - கைக்கடிகாரம் அணிவது போன்று ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story