மாநில செய்திகள்

சமூக வலைத்தளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு; அ.தி.மு.க. முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது + "||" + Social website Honorable Minister Thangamani ADMK The former Female MLA Arrested

சமூக வலைத்தளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு; அ.தி.மு.க. முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது

சமூக வலைத்தளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு; அ.தி.மு.க. முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது
அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பரப்பிய அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்,

நாமக்கல்லை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 59). இவர் கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தார்.


இந்தநிலையில் சரஸ்வதி மீது கீரம்பூர் அ.தி.மு.க. கிளை செயலாளர் ராஜா (34) என்பவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், ‘முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி தொடர்ந்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பற்றி சமூக வலைத்தளமான ’வாட்ஸ்-அப்’பில் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். இதை எனது மனைவியின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இதுபற்றி அவரை சந்தித்து கேட்டபோது, அவர் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். முன்னதாக சரஸ்வதி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறியதால், அவருக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரஸ்வதி சேலம் அழைத்து வரப்பட்டார். அப்போது வரும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் சரஸ்வதியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முன்னதாக நாமக்கல் மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்தபோது தி.மு.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.