அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர் டி.டி.வி.தினகரன் பேட்டி


அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2018 9:30 PM GMT (Updated: 23 Sep 2018 8:48 PM GMT)

அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

உடுமலை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாஸ் எம்.எல்.ஏ. உணர்ச்சி வசப்பட்டு தேவையில்லாமல் பேசியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அரசு கருணாசை கைது செய்துள்ளது. கருணாஸ் பேசியது சரி என்று நான் சொல்லவில்லை. எச்.ராஜா காவல்துறையை பற்றி, நீதிமன்றத்தை பற்றி எப்படியெல்லாம் பேசினார். பின்னர் அவர் அது என் குரலே இல்லை என்கிறார். அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துவிட்டு பேசாமல் உள்ளனர். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும்.

கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த அரசு அடிமை அரசாங்கம் என்பதை கருணாஸ் கைது செய்யப்பட்டதன் மூலமும், எச்.ராஜா சுதந்திரமாக உள்ளதையும் பார்த்தால் தெரிகிறது. காவல்துறையின் கல்லீரல் அழுகி விட்டது என்று எச்.ராஜா கூறியதில் எனக்கு உடன்பாடு உள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆட்சியை ஊழல் ஆட்சி என்றார். தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று கூறி அ.தி.மு.க.வை கைப்பற்ற போகிறேன் என சொல்லிவிட்டு பிறகு சமரசம் ஆகிவிட்டார். அவர் பசுத்தோல் போர்த்திய புலி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தரை பற்றி பேசியுள்ளார். அவரை பற்றி பேச இவருக்கு தகுதி உள்ளதா?. புத்தர் அரச பதவியை துறந்து விட்டு துறவியானார். இவர் தன்னை பதவியில் அமர்த்தியவருக்கே துரோகம் செய்தவர். இது மக்களுக்கு நன்கு தெரியும். அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களில் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். ஓட்டெடுப்பில் முதல்-அமைச்சரை மாற்றுவோம்.

மக்களுக்காக ஆட்சி நடக்கவில்லை. மக்கள் சந்திப்பு மூலம் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். நாங்கள் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றிபெறுவோம். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் பொறுப்புக்கு வரமுடியும் என்பது பகல் கனவாகத்தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story