ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்தது என்ன? ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி


ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்தது என்ன? ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்  ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 Sep 2018 12:15 AM GMT (Updated: 29 Sep 2018 11:15 PM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

சென்னை, 

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தார். சென்னையில் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது, நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 4½ ஆண்டு கால ஆட்சியில் எந்தவொரு ஊழல் புகாரிலும் சிக்காத பா.ஜ.க. இறுதிக் கட்டத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், இதுபோன்ற குற்றச்சாட்டை பா.ஜ.க. எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?.

பதில்:- காங்கிரஸ் சொல்வதை ஆதாரமாக வைத்து இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள். அதில் தப்பு ஒன்றும் இல்லை. இதை நான் வேறு விதமாக பார்க்கிறேன். கடந்த 4½ ஆண்டுகளாக ஊழலே இல்லாமல் பா.ஜ.க. அரசு நடக்கிறது. எப்படியும் ஊழல் ஒன்றையாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ் கட்சி இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டை வைக்கிறது. முதலில், ரபேல் போர் விமான விலையை பற்றி சொன்னார்கள். அதன்பிறகு, தாங்கள் (காங்கிரஸ்) வாங்க முடிவு செய்த விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். அதன்பிறகு, எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு கொடுக்காமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள் என்றார்கள். இப்படி ஒவ்வொன்றாக, மைல் கற்கள் என்று சொல்வார்களே, அதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.

இதில் இருந்தே நமக்கு ஒன்று புரியவேண்டும். இவர்களது நோக்கம், ஊழலே இல்லாமல் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்பதுதான். அதனால்தான், ‘போட்டுவைப்போம் ஒரு கல்லை’ என்ற அடிப்படையில் ரபேல் போர் விமான ஒப்பந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

ஏனென்றால், அவர்களது (காங்கிரஸ்) ஆட்சியில், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியை சொல்லவில்லை. அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில், ராணுவ பொருட்கள் வாங்குதல் என்ற பகுதியை பார்த்தோம் என்றால், பாதுகாப்பு துறைக்கு தரகர்கள் இல்லாமல் ஒரு பொருளை வாங்கியதே இல்லை. வாங்கிய பிறகு, ஊழலில் சிக்கிக்கொண்டார்களா? என்று பார்த்தால், அதுவும் இல்லை. இன்றைக்கு பாதுகாப்பு துறையில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் ஊழல் நடக்கவில்லையே? என்பதுதான் அவர்களின் வேதனை.

கேள்வி:- ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?.

பதில்:- பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறோம். பிரதமர் எல்லாவற்றுக்கும் பதில்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். 2014-2015-ம் ஆண்டில் ஊரெல்லாம் ஒரே குற்றச்சாட்டு. எல்லா மாநிலங்களிலும் அதே குற்றச்சாட்டு. என்ன குற்றச்சாட்டு அது?.

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் புகுந்து அங்கே தாக்கிவிட்டார்கள், இங்கே தாக்கிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். இது ஏன் நடந்தது?. காங்கிரஸ்காரர்கள் அப்போதும் சொன்னார்கள். பிரதமர் ஏன் இதைப்பற்றி பேசவில்லை என்றனர். கிறிஸ்தவ தேவலாயங்களில் தாக்குதல் நடந்தால், அது எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநில சட்டம் ஒழுங்கை சார்ந்ததாக அது அமையும். அதற்கு அந்தந்த மாநில அரசுகள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான் பதில் சொல்ல வேண்டும் என்றார்கள்.

அந்த விஷயத்தில் முடிவு எவ்வாறு இருந்தது?. எல்லா மாநிலங்களிலும், அந்தந்த மாநில அரசுகள் நடத்திய விசாரணையில், கிறிஸ்தவ தேவாலய தாக்குதலுக்கும் அங்கேயுள்ளவர்கள் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, நிலப்பிரச்சினை, உட்பூசல், வேறு விவகாரம் என்று பல்வேறு காரணங்கள் அதற்கு இருந்தது. ஆனால், இதற்கெல்லாம் மோடி அரசாங்கம்தான் காரணம் என்று மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப முயன்றார்கள். இறுதியில், அந்தந்த மாநில அரசுகளே உண்மை நிலையை கண்டுபிடித்துவிட்டது. கிறிஸ்தவ தேவாலய தாக்குதல்களுக்கு பொதுப்படையான எந்தவொரு காரணமும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், மோடி இந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள்.

கேள்வி:- ரபேல் போர் விமானம் ஒன்றின் விலை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.526 கோடியாக இருந்ததாகவும், இப்போது அது ரூ.1,611 கோடியாக அதிகரித்தது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறதே?. ஏன் இந்த விலை வித்தியாசம்?.

பதில்:- காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த கட்சி. அவர்களது ஆட்சி காலத்தில் ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த விலையில் அவர்கள் ரபேல் போர் விமானத்தை வாங்கினார்களா?. இப்போது நீங்கள் ஒரு கடையில் போய் பொருள் ஒன்றை வாங்குகிறீர்கள். அதே பொருளை நான் வேறு ஒரு கடையில் போய் வாங்குகிறேன். நீங்கள் வாங்கிய பொருளுக்கும், நான் வாங்கிய பொருளுக்கும் உள்ள விலையை ஒத்துப்பார்த்து, நான் குறைந்த விலைக்கு வாங்கியிருக்கிறேனே என்று நீங்கள் சொன்னால், வாங்கிய பிறகுதான் அதை சொல்ல முடியும். ஆனால், ரபேல் போர் விமானத்தை காங்கிரஸ் ஆட்சியில் வாங்கவே இல்லை. வாங்குவதற்கு முடிவுகூட செய்யவில்லை. அப்படியே சென்றுவிட்டார்கள்.

போர் விமானம் என்பது நேரடியாக வாங்குவது அல்ல. அதற்கு டெண்டர் விட்டு, அதில் குறைந்த தொகைக்கு யார் வாங்கித்தருவதாக சொல்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அந்த பணி வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் போர் விமானத்தை என்ன விலைக்கு வாங்க தீர்மானித்தார்கள் என்பது ராகுல்காந்திக்கே தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலையை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை ரூ.526 கோடியே ரபேல் விமானத்தின் விலை என்று எடுத்துக்கொள்வோம். அந்த விலையில் வாங்கும் விமானம் எப்படி இருக்கும்?. அதில் ஒரு பைலட் இருக்கலாம். பறந்து சென்று இன்னொரு இடத்தில் இறங்கும். அவ்வளவுதான். போருக்கான கருவிகள் அதில் இருக்காது.

ஒரு போர் வந்தால், அந்த விமானத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. ஒரு போருக்கு தயாராகும் வகையில் அந்த விமானத்தில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், விதவிதமான ஆயுதங்களை வாங்கி வைக்க வேண்டும். அதன் ஒவ்வொன்றின் விலையும் வெவ்வேறு மாதிரி இருக்கும். அந்த வசதிகளை செய்தால், போருக்கு ஏற்ற விமானமாக அது இருக்கும்.

நாங்கள் ஏதோ, ரூ.1,611 கோடிக்கு ரபேல் விமானத்தை வாங்கியதாக அவர்கள் (காங்கிரஸ்) சொல்கிறார்கள். அந்த தொகையை அவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒருவேளை, அனைத்து போர் கருவிகளையும் பொருத்திய பிறகு, அந்த விலைக்கு நாங்கள் வாங்கியிருப்போமோ, என்னமோ?. ஒரு விமானத்தின் விலையை, போர் கருவிகள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையுடன் ஒப்பிட்டு எப்படி சொல்ல முடியும்? எனவே, விஷயம் தெரியாமல் காங்கிரஸ் கட்சி பேசுகிறதா?. அல்லது விஷயம் தெரிந்துகொண்டு திமிராக, தப்பாகத்தான் சொல்வோம் என்று கூறுகிறதா?. எனவே, புரிந்துகொண்டு அவர்கள் (காங்கிரஸ்) கேள்வி கேட்க வேண்டும்.

கேள்வி:- பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்துடன் மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள பா.ஜ.க. அரசு பரிந்துரைத்ததாக கூறியுள்ளாரே?.

பதில்:- அரசு உள் ஒப்பந்த அடிப்படையில் 36 ரபேல் போர் விமானங்களை நாம் வாங்குகிறோம். இந்திய அரசுக்கும், இன்னொரு அரசுக்கும் ஒப்பந்தம் இருக்கும் நிலையில், தனிப்பட்ட நிறுவனங்கள் இதில் எதுவும் பேச முடியாது. இதுவரை, யாருக்கு அவர்கள் ஒப்பந்தத்தை கொடுக்கப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் எந்தவொரு நிறுவனத்தையும் பரிந்துரைக்கவில்லை. ஊடகங்களிலேயே 70 கம்பெனிகளுடன் பிரான்ஸ் ஒப்பந்தம் போட்டதாக தகவல்கள் வருகிறது. அவர்கள் எத்தனை கம்பெனிகளுக்கும் ஒப்பந்தம் கொடுக்கிறார்கள். அது 60 ஆக இருந்தாலும் சரி, 10 ஆக இருந்தாலும் சரி. அது அவர்களின் விருப்பம்.

இதில் உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள் எல்லாம் அடங்கியிருப்பதால், நான் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன். 2012-ம் ஆண்டிலேயே, காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானத்தை கொடுக்கும் ‘டெசால்ட்’ என்ற நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இருந்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அண்ணன், தம்பி இடையே சொத்துப் பங்கீடு நடந்தபோது, ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி தம்பிக்கு வந்துவிட்டது. இன்னொரு கம்பெனி அண்ணனுக்கு சென்றுவிட்டது. அதனால், நாங்கள் (பா.ஜ.க.) போய் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஒப்பந்தம் போட்டபோது, குற்றம் இல்லாதது, இன்றைக்கு நாங்கள் போடும்போது குற்றமாகிவிட்டது.

அப்போதெல்லாம் உலகளாவிய டெண்டர். இங்கே அரசு உள் ஒப்பந்தம். எனவே, இதில் யாரும் தலையிடவே முடியாது. எனவே, நாங்கள் (பா.ஜ.க.) செய்தால் குற்றம். அவர்கள் (காங்கிரஸ்) செய்தால் குற்றமில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை.

கேள்வி:- கடந்த மார்ச் மாதம் நீங்கள் சென்னை, ஓசூர், சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களை உள்ளடக்கி ராணுவ தொழிற்சாலைகள் வழிப்பாதை அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள். அந்த பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது?. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?.

பதில்:- ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதில், மாநில அரசும் பங்கேற்கும். அதுதவிர, தனியார் தொழில் நிறுவனங்களும் வந்து பேசுவார்கள். எங்களுக்கு இந்த மாதிரியான வசதிகளை செய்துகொடுத்தால், நாங்களும் ராணுவத்திற்கு தேவையான பொருட் களை தயாரித்து வழங்க வசதியாக இருக்கும் என்று தங்களின் கருத்துகளை முன்வைப்பார்கள். அந்த கருத்துகளும் பரிசீலிக்கப்படும். தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அதற்கான, பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story