எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா: சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர்-அமைச்சர் ஜெயக்குமார்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா: சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர்-அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 30 Sep 2018 11:29 AM GMT (Updated: 30 Sep 2018 11:29 AM GMT)

சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர் என்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

சென்னை,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா தொடங்கியது. மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விழா மலரை துணை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கியாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளனர். எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம். சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும். முதலமைச்சர் ஆவதற்கு தினகரனுக்கு தகுதி உண்டா?

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story