பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 3 Oct 2018 9:00 PM GMT (Updated: 3 Oct 2018 8:54 PM GMT)

பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

திருவள்ளூர், 

மதுரை திருமங்கலம் முகமதுசாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரத்குமார் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சரத்குமாரும், மதுரை திருமங்கலம் உசிலம்பட்டியை சேர்ந்த மஞ்சுபாஷினி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை தொடர்ந்து மஞ்சுபாஷினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதையடுத்து சரத்குமார், மஞ்சுபாஷினி இருவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அன்று திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தையும் பதிவு செய்துகொண்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வயதை அடைந்ததால் தற்போது இருவரும் விருப்பத்துடனும், சந்தோஷத்துடனும் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மஞ்சுபாஷினியின் பெற்றோர் தன் மகள் காணாமல் போய்விட்டாள். அவளை கண்டுபிடித்து தருமாறு மதுரை மாவட்டம் திருமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர்.

மேலும் சரத்குமாரின் உறவினர்கள் 2 பேர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மஞ்சுபாஷினியின் பெற்றோர், சரத்குமார் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் அளித்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் சரத்குமார் மற்றும் மஞ்சுபாஷினியை கொலை செய்யவும் திட்டம் தீட்டி அவர்களை ஆட்கள் மூலம் தேடி வருவதும் தெரியவந்தது.

இதனால் பதறிப்போன காதல் ஜோடியான சரத்குமார், மஞ்சுபாஷினி ஜோடியினர் நேற்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அப்போது அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story