இன்ஸ்பெக்டர்- டி.வி. நடிகை மீது வழக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை


இன்ஸ்பெக்டர்- டி.வி. நடிகை மீது வழக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2018 10:15 PM GMT (Updated: 3 Oct 2018 8:59 PM GMT)

முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலையை பறித்துச் சென்ற புகாரில் போலீஸ் இன்ஸ்பெக்டர், டி.வி. நடிகை உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் முத்தையா(வயது 72). தொழில் அதிபரான இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், “கடந்த 29-ந்தேதி இரவு எனது மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறி இன்ஸ்பெக்டர் தாம்சன், தாம்பரத்தை சேர்ந்த சிறுத்தை பாண்டியன், அவருடைய மனைவியும், டி.வி. நடிகையுமான சஜினி மற்றும் ரவுடிகள் பலர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, என்னை மிரட்டி, ரூ.10 லட்சம் காசோலையை வாங்கிச்சென்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சேலையூர் உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாண்டியன், அவருடைய மனைவியும், நடிகையுமான சஜினி உள்பட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் தாம்சன், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, “பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாண்டியன் கூறும்போது, “எங்களுக்கு தரவேண்டிய பணத்தை வாங்க தான் சென்றோம். ஆனால் எங்கள் மீது போலீசில் பொய் புகார் செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story