ஊட்டி அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலி; 2 பேர் மீட்பு


ஊட்டி அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலி; 2 பேர் மீட்பு
x
தினத்தந்தி 3 Oct 2018 10:15 PM GMT (Updated: 3 Oct 2018 9:13 PM GMT)

ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.

மசினகுடி, 

ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராமராஜேஷ் (36), வியாசர்பாடி இப்ராகிம் (35), பெரம்பூரை சேர்ந்த அருண் (36), வக்கீல் ரவிவர்மா (39) மற்றும் தொழில் அதிபர்கள் ஜெயக்குமார் (36), அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

கடந்த 30-ந் தேதி காரில் ஊட்டிக்கு சென்ற அவர்கள் 7 பேரும் அங்கு ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 1-ந் தேதி காலை விடுதியில் இருந்து ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க காரில் புறப்பட்டனர்.

அவர்கள் கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் உள்ள 35-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டபடி சென்றது. இதனால் காருக்குள் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

200 அடி பள்ளத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கார் விழுந்து கிடந்ததால் அந்த பாதையில் சென்ற யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. ஊட்டி சென்றவர்களிடம் இருந்து 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை, செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள் இதுபற்றி ஊட்டி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனத்துறை ஊழியர்கள் கல்லட்டி மலைப்பாதையில் நேற்று தேடியபோது அங்கு 200 அடி பள்ளத்தில் நொறுங்கிக்கிடந்த காரை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் ராமராஜேஷ், அருண் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. விபத்து நடந்து 2 நாட்களுக்கு பின்னரே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்திருந்ததால் அவர்களால் காரில் இருந்து வெளியே வரமுடியவில்லை என தெரிகிறது.

போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டனர். ராமராஜேஷ் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், அருண் மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பலியான ஜூட் அண்டோ கெவின், இப்ராகிம், ரவிவர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். மலைப்பாதையில் 30 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் 60 கி.மீ. வேகத்தில் சென்றதால் பிரேக் பிடிக்க முடியாமல் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.

Next Story