தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா: பொதுமக்கள் நீராடும் இடங்கள் 8-ந்தேதி அறிவிக்கப்படும் ஐகோர்ட்டில் அரசு தகவல்


தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா: பொதுமக்கள் நீராடும் இடங்கள் 8-ந்தேதி அறிவிக்கப்படும் ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:15 PM GMT (Updated: 4 Oct 2018 7:48 PM GMT)

தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் புஷ்கரம் விழாவில் பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் அவர்கள் ஆற்றில் நீராடும் இடங்கள் தேர்வு செய்து, அது குறித்த தகவலை வருகிற 8-ந்தேதி தெரிவிப்பதாக ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

சென்னை, 

தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் புஷ்கரம் விழாவில் பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் அவர்கள் ஆற்றில் நீராடும் இடங்கள் தேர்வு செய்து, அது குறித்த தகவலை வருகிற 8-ந்தேதி தெரிவிப்பதாக ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டில், புலவர் மகாதேவன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், ‘நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை புஷ்கரம் விழா விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்காக நெல்லையில் தைப்பூசப்படித்துறை மற்றும் குறுக்குப்படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும் தைபூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்து இருப்பது சட்டவிரோதமானது.

அதேபோல, குறுக்குத்துறையில் நீராடுவதற்கு தடை விதித்து இருப்பதையும் ஏற்க முடியாது. எனவே இந்த 2 படித்துறைகளிலும் புஷ்கர விழாவின்போது பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா ஆஜராகி, ‘மனுதாரர் கூறும் இரு படித்துறைகளிலும் பக்தர்களை நீராட அனுமதிக்க முடியாது. அது ஆபத்தான பகுதியாகும். தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை நீரின் ஓட்டம் எப்போதும் ஒரு சீராக இருக்காது. திடீரென தண்ணீர் குறையும், திடீரென அதிகரிக்கும். அந்த சூழ்நிலையில் சுழல் ஏற்படும். அந்தநேரத்தில் பக்தர்கள் குளிக்கும்போது அசம்பாவித சம்பவம் நடந்து விடக்கூடாது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அந்த பகுதிகளில் எக்காரணம் கொண்டும் நீராட அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், ‘மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரை, விழாவுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்புதான் முக்கியமானது. மனுதாரர் கேட்கும் இடங்களில் நீராட அனுமதிக்க முடியாது. பாதுகாப்பாக நீராட ஆற்றில் 4 அல்லது 5 இடங்களை தேர்வு செய்து, 15 நிமிடத்துக்கு 50 பேர் நீராடும் விதமாக ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்படும். அந்த இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதுவும் அந்த இடங்கள் எது? என்று வருகிற 8-ந்தேதி தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story