ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 5 Oct 2018 9:30 PM GMT (Updated: 5 Oct 2018 7:34 PM GMT)

வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கக்கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது போன்ற பணிகளை செய்கின்றனர். இந்த பட்டியலில் ஏராளமான பிழைகள் ஏற்படுகின்றன. இந்த பிழையை அரசியல் கட்சிகளின் உதவியுடன், சரி செய்யும்போது, மேலும் பல முறைகேடுகள் நடக்கின்றன. போலி வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

இதில் பாதிக்கப்படுபவர் கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். வாக்காளர் பட்டியலை சரிசெய்ய ஐகோர்ட்டு பல மணி நேரம் செலவிடுகிறது. தற்போது, தனித்தன்மை வாய்ந்த அடையாளமாக ஒவ்வொருவருக்கும், ஆதார் அடையாள அட்டை திகழ்கிறது.

எனவே, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும்போது, போலி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இந்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால், திடீரென தேர்தல் ஆணையம் இதை கைவிட்டு விட்டது.

எனவே, ஒவ்வொரு வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை எண்ணை இணைக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘வாக்காளர் பட்டியலுடன், ஆதாரை இணைக்கும் திட்டம் முன்பு இருந்தது. அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், அந்த திட்டம் கைவிடப்பட்டது’ என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய உள்துறை, சட்டத்துறை செயலாளர்கள், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆதார் ஆணையம் 3 வாரத்துக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story