சிலை கடத்தல் வழக்கில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா - கிரண் கைது செய்யப்படுவார்களா?


சிலை கடத்தல் வழக்கில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா - கிரண் கைது செய்யப்படுவார்களா?
x
தினத்தந்தி 8 Oct 2018 11:30 PM GMT (Updated: 8 Oct 2018 10:56 PM GMT)

சிலை கடத்தல் வழக்கில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரணும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்களில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று ரூ.1,000 கோடிக்கும் மேல் சம்பாதித்ததாக கூறப்பட்ட புகாரில் சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், தீனதயாளன், துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்ஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிரடி திருப்பமாக சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா, பெண் தொழில் அதிபர் கிரண் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு அசோக்நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் அடங்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் வீடு மற்றும் பண்ணை வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில் 224 பழங்கால கலைப்பொருட்கள் சிக்கின. பெண் தொழில் அதிபர் கிரணுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் மொத்தம் 247 பழங்கால கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரன்வீர்ஷாவின் வீடுகளில் கைப்பற்றிய கலைப்பொருட்கள் பெருமாள் கோவில் ஒன்றில் திருடப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கிரணின் விருந்தினர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கல்தூண்களும், கற்சிலைகளும், ஐம்பொன் சிலைகளும் எந்த கோவிலில் திருடப்பட்டவை என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவுக்கும், கிரணுக்கும் சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ரன்வீர்ஷாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க ‘லுக்அவுட் நோட்டீசும்’ கொடுக்கப்பட்டுள்ளது. ரன்வீர்ஷா விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேற்று அவருக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழில் அதிபர் கிரணுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் தற்போது மும்பையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க நேற்று ‘லுக்அவுட் நோட்டீஸ்’ கொடுக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிரணுக்கு தற்போது 53 வயதாகிறது. இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழகம் மற்றும் ஆந்திராவில் நடத்திவருகிறார். சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் ரன்வீர்ஷாவும், இவரும் தொழில்ரீதியான பங்குதாரர்கள் ஆவார்கள். சர்க்கரை ஆலை, சிமெண்டு ஆலை போன்றவற்றையும் நடத்துகிறார்கள்.

கிரணிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் தயாநிதி, செந்தில், அஜிவ், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேருக்கும் போலீசார் நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்கள். கிரண் பதுக்கிவைத்திருந்த கலைப்பொருட்கள் முதலில் தேனாம்பேட்டை முத்துராமலிங்க தேவர் சாலையில் உள்ள ஒரு கடைக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. போலீசாரின் நடவடிக்கை தீவிரமானதை கண்டு தொழில் அதிபர் கிரண், அந்த கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை 2 லாரிகளில் ஏற்றிவந்து போயஸ் கார்டனில் உள்ள தனது விருந்தினர் மாளிகை வளாகத்தில் பூமிக்குள் புதைத்து வைத்துள்ளார்.

இந்த விவரம் தெரிந்த 2 ஊழியர்கள் போலீசுக்கு தெரியப்படுத்தாமல் இருக்க ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் இருவரையும் கிரண் போலீசில் சிக்கவைத்துவிட்டார். அந்த ஊழியர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துவிட்டனர். அந்த ஊழியர் மூலமாகத்தான் விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பூமிக்குள் புதைத்துவைத்த விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சிலை கடத்தல் வழக்குகளில் ரன்வீர்ஷாவும், கிரணும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தீவிர விசாரணைக்கு பிறகு தான் அவர்கள் இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே, ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். கிரணும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் இருவரிடமும், சிலை கடத்தலில் எந்த அளவிற்கு அவர்களுக்கு தொடர்பு உள்ளது. வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்திச்சென்று விற்பனை செய்துள்ளார்களா? பதுக்கிவைத்திருந்த சிலைகள், கலைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தார்களா? என்பது பற்றிய கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு, அதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிலை கடத்தல் வழக்கு விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story