சிலைகள் வாங்கிய ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் ரன்வீர்ஷா தரப்புக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சிலைகள் வாங்கிய ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் ரன்வீர்ஷா தரப்புக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2018 9:44 PM GMT (Updated: 9 Oct 2018 9:44 PM GMT)

போலீசார் பறிமுதல் செய்துள்ள சிலைகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி ரன்வீர்ஷா தரப்புக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 244 சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல, சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள கிரண்ராவ் என்ற பெண் தொழில் அதிபர் வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் சோதனை நடத்தி, பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலைகள் மற்றும் பழங்கால கல்தூண்களை பறிமுதல் செய்தனர்.

முன்ஜாமீன் மனு

இதையடுத்து, ரன்வீர் ஷா, கிரண் ராவ் உள்பட பலரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதன்படி விசாரணைக்கு ஆஜராகாத ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோர் தங்களை போலீசார் கைது செய்துவிடுவர் என்று அச்சம் உள்ளது என்றும், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

என்ன ஆதாரம்?

ரன்வீர்ஷா சார்பில் ஆஜரான வக்கீல், ‘சிலை கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைதான தீனதயாளன் என்பவருக்கும், ரன்வீர்ஷாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழங்கால பொருட்களின் மீதான ஆசையினால், கடந்த 1993-ம் ஆண்டு முதல் இவற்றை அவர் சேகரித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் துறையிடம் இந்த பொருட்களுக்காக சான்றிதழ் பெற்றுள்ளார்’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘1993-ம் ஆண்டு வாங்கியதாக கூறப்படும் சிலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக சான்றிதழ் பெற்றது ஏன்?. இந்த பழங்காலப் பொருட்கள் எப்போது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? என்பதற்கான ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் மனுதாரர் தரப்பு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தனர்.

Next Story