“பத்திரிகை, கருத்து சுதந்திரம் பக்கம் நீதிமன்றம் நின்றது” விடுதலை தீர்ப்பு வந்த பின் நக்கீரன் கோபால் பேட்டி


“பத்திரிகை, கருத்து சுதந்திரம் பக்கம் நீதிமன்றம் நின்றது” விடுதலை தீர்ப்பு வந்த பின் நக்கீரன் கோபால் பேட்டி
x
தினத்தந்தி 9 Oct 2018 11:15 PM GMT (Updated: 9 Oct 2018 10:10 PM GMT)

பத்திரிகை, கருத்து சுதந்திரம் பக்கம் நீதிமன்றம் நின்றது என்று நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

சென்னை, 

நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்ட பிறகு, எழும்பூர் நீதிமன்றம் வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நீதிமன்றம் கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் பக்கம் நின்றது. அதை நக்கீரன் வணங்குகிறது. ராஜ்பவன் பற்றி ஒரு செய்தி எங்களுக்கு வந்தது. அதை புலனாய்வு செய்து நக்கீரன் இதழில் வெளியிட்டோம். அந்த செய்திக்காக தான் என்னை கைது செய்ததாக, இங்கு வந்த பிறகு தான் எனக்கே தெரியும்.

காலையில் என்னை போலீசார் கைது செய்தபோது எதற்காக கைது செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

எழும்பூர் நீதிமன்றம் வந்த பிறகு, நீதிபதி சொல்லித்தான் என்ன வழக்கு என்று எனக்கு தெரியும். நாங்கள் வெளியிட்ட செய்திக்காக என்னை கைது செய்து இருப்பதாக சொன்னார்கள். ஒரு செய்தி கிடைக்கிறது. அதை புலனாய்வு செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்கிறோம். அதில் ஆட்சேபணை இருந்தால் மறுப்பு சொல்லி இருக்கலாம். இல்லையென்றால், இதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கிறது. ஆனால் எந்த விவரமும் சொல்லாமல், ஏதோ கொலைக்குற்றவாளியை கைது செய்வது போல, கைது செய்து கொண்டு வந்து நீதிமன்றம் கொண்டு வந்தார்கள்.

உண்மை எப்போதும் நிலைநிற்கும். கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு என் உடல்நிலையை பரிசோதிக்க அழைத்து சென்றார்கள். அப்போது அங்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது ‘கருத்து சுதந்திரத்தின் பக்கம் எப்போதும் நிற்போம்’ என்று தெரிவித்து ஆறுதல் கூறி சென்றார்.

எப்போதும் நீதிமன்றத்தில் வக்கீல்களை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இந்து ராம், திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோரை உள்ளே வர அனுமதித்தார்கள். இந்து என்.ராமிடம், நீங்கள் கருத்து எதுவும் சொல்கிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அப்போது அவர், 124 பிரிவு வழக்கை எதிர்த்து தன்னுடைய கருத்தை சொன்னார்.

உண்மையில் முடிவாக, கருத்து சுதந்திரத்துக்கு பக்க பலமாக நீதிமன்றம் இருப்பதை இந்த நேரத்தில் பெருமையாகவும், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கையாகவும் ஆறுதல்படும் வகையிலும் தெரிவிக்கிறேன்.

சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்த போது என்னை சந்திக்க வைகோ வந்திருந்தார். அப்போது போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் அங்கு சாலைமறியல் செய்ததாகவும், இடையூறாக இருந்ததாகவும் அவரை கைது செய்து, விடுதலை செய்யாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அண்ணன் வைகோவுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story