“தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை” ஐகோர்ட்டு நீதிபதி வேதனை


“தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை” ஐகோர்ட்டு நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 10 Oct 2018 9:15 PM GMT (Updated: 10 Oct 2018 8:23 PM GMT)

தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை நிலவுவதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பம்மல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னுடைய சொத்து பத்திரத்தை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பூபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். விசாரணையின்போது, மனுதாரரிடம் அவரது பத்திரம் ஒப்படைக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.சுரேஷ், ‘பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்துப்பத்திரங்கள் எதுவும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அவை அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சேதமடைந்த பத்திரத்தில் உள்ள விவரங்களை எல்லாம் மாற்றி, புதிய பத்திரத்தை அதிகாரிகள் உருவாக்குகின்றனர். இதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது’ என்று கூறினார்.

மேலும் அவர், ‘இவ்வாறு புதிய ஆவணங்களை தயாரிப்பதால், அரசு நிலம் மட்டுமல்லாமல், தனியாருடைய சொத்துகளும் ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களினால், கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மஞ்சேரியில் 9.63 ஏக்கர் அரசு நிலத்தை, தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி என்.கிருபாகரன், அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டார். மாவட்ட பதிவாளரும் கோர்ட்டில் ஆஜராகி, அந்த ஆவணங்கள் எல்லாம் சேதமடைந்து விட்டதாக கூறினார். உடைந்த நிலையில் அந்த பத்திரங்களை ஒரு உறையில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நீதிபதி, ‘சார்-பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் அடிப்படையிலேயே, சொத்து யாருடையது என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. ஏழைகள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பு, பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ்களை பெறுகின்றனர்.

அப்படிப்பட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றால், மக்கள் யாரிடம் போய் தங்களது சொத்து விவரங்களை கேட்பார்கள்?. தமிழகத்தில் யாருடைய சொத்துகளும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை தான் தற்போது உள்ளது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சொத்து ஆவணங்கள் எப்படி சேதமடைகிறது? அதிகாரிகள் மனச்சாட்சியுடன் பணியாற்றினால், இதுபோன்ற நிலை ஏற்படாது’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர்கள், பதிவாளர்கள் பலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரில் அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும். சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது? எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? உள்ளிட்ட விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல, செம்மஞ்சேரியில் உள்ள 9.63 ஏக்கர் அரசு நிலத்தின் ஆவணம் எப்போது சேதமடைந்தது? சேதமடைந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதா? சொத்து சேதமடைந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? ஆவணங்கள் சேதமடைந்ததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழகம் முழுவதும் உள்ள பதிவாளர் அலுவலகத்தில், இதுபோல எத்தனை சொத்து ஆவணங்கள் சேதமடைந்துள்ளன?

ஆவணங்களை பராமரிக்க என்ன செய்யலாம்? இந்த ஆவணங்களை எல்லாம் ‘டிஜிட்டல்’ முறையில் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிவடைந்து விட்டதா?

இந்த கேள்விகளுக்கு உள்துறை செயலாளர், பத்திரப்பதிவு ஐ.ஜி. ஆகியோர் வருகிற நவம்பர் 1-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story