குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 10 Oct 2018 8:34 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானையில் கோவில் பூசாரி அமர்ந்து கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு, முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து சென்றார். காலை 9 மணிக்கு கொடிப்பட்டம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து காலை 9.10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் தசரா திருவிழா கொடியேற்றப்பட்டது.

அப்போது கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கோவிலில் காப்பு கட்டிக்கொண்டனர்.

கோவிலில் காப்பு அணிந்த பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பறையில் தங்கியிருந்து விரதம் இருந்து வரும் மற்ற பக்தர்களுக்கு காப்பு அணிவித்தனர்.

நேற்று மதியம் முதல் இரவு வரையிலும் சுவாமி- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை- திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.

Next Story