ரூ.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாதவரம் அடுக்கு மாடி பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது


ரூ.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாதவரம் அடுக்கு மாடி பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 9:40 PM GMT)

சென்னை, மாதவரத்தில் அடுக்கு மாடி புறநகர் பஸ் நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

சென்னை, 

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து திருவள்ளூர், திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு என்று மாதவரத்தில், கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில், 8 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என 2011-12-ம் ஆண்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாதவரத்தில் ரூ.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நவீன வசதிகள்

இந்த புதிய பஸ் நிலையம், அடித்தளம், தரைத்தளம் மற்றும் மேல்தளம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. பஸ் நிலையக் கட்டிடத்தின் அடித்தளத்தில் பயணிகள் வசதிக்காக 1,700 இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டிடத்தின் முன்பகுதியில் 72 சிறிய பஸ்கள் (சீருந்துகள்) நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் நிலையக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நவீன வசதிகளுடன் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், பொது கழிவறைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் தனி அறை, உணவகம், மற்றும் ஏ.டி.எம்.மையம் போன்ற வசதிகளும், மேல்தளத்தில் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பயன்

இந்த பஸ் நிலையத்தில், ஒரே நேரத்தில் தரை தளத்திலிருந்து 42 பஸ்கள் இயக்க முடியும். 2 நடைமேடைகளில் பஸ்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 48 இயங்கா பஸ்கள் நிறுத்தி வைக்க மேல்தளத்தில் போதிய இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு வசதி மற்றும் உயர்கோபுர மின்விளக்கு போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வடசென்னைப் பகுதி பொதுமக்கள் பெரிதும் பயனடையும் வகையில் இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வணிக வளாக கட்டிடம்

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், ஒரு தாழ்தளம், தரைதளம் மற்றும் இரண்டு மேல்தளங்களுடன், மொத்தம் 65 ஆயிரத்து 313 சதுர அடி கட்டிட பரப்பளவில், ரூ.21 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய தானிய கிடங்கு மற்றும் வணிக வளாகக் கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

பணிநியமன ஆணைகள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 34 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story