ஆந்திரா-ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்கும்


ஆந்திரா-ஒடிசா இடையே  புயல் இன்று கரையை கடக்கும்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:45 PM GMT (Updated: 10 Oct 2018 10:05 PM GMT)

வங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 270 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அந்த புயல் கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அரபிக்கடலில் உருவான புயல் ‘லூபன்’ ஒமனில் 14-ந் தேதி கரையை கடக்கும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரையிலும், அரபிக்கடலில் 14-ந் தேதி வரையிலும் மீன் பிடிக்க செல்லவேண்டாம்.

தமிழகத்தில் இந்த இரு புயல் காரணமாக பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சின்னக்கல்லார் 7 செ.மீ., வால்பாறை, மேட்டுப்பாளையம் தலா 4 செ.மீ., கூடலூர் பஜார், உடுமலைப்பேட்டை, பெரியாறு தலா 2 செ.மீ., பெரியகுளம், வால்பாறை, மேட்டுப்பட்டி, போடிநாயக்கனூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

தித்லி புயல் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமநாதபுரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒடிசாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கை

தித்லி புயல் இன்று ஒடிசாவில் கரையைக் கடப்பதையொட்டி, அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கள நிலவரத்தை நேற்று ஆய்வு செய்தார். கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கிற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு கஞ்சம், பூரி, குர்தா, கேந்திரபாரா, ஜெக்த்சிங்பூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது.

இதை அரசு தலைமைச்செயலாளர் ஏ.பி. பதி உறுதி செய்தார்.

மேலும், “புயலையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா பேரிடர் அதிரடி படையினரும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உதவியை இதுவரை நாங்கள் நாடவில்லை. தேவைப்பட்டால் நாடுவோம்” என அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரா நிலவரம்

இதே போன்று ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்; சேதங்களும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீகாகுளத்திலும், விசாகப்பட்டினத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story