மாநில செய்திகள்

அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்குவது ஏன்?மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி + "||" + Opposition parties including MK Stalin questioned

அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்குவது ஏன்?மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி

அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்குவது ஏன்?மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி
அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்குவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க. அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி என்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5,008.45 ரூபாயும், ஸ்ரீராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4,936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5,098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விடவேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. கோல் இந்தியாவிடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க. அரசின் கையாலாகாத்தனமாகவும் தந்திரமாகவும் தெரிகிறது.

கண்டனம்

சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி, போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது, பற்றாக்குறை ஏதுமில்லை என்று கூறினார். ஆனால் முதல்-அமைச்சரோ நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது, உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகரியுங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு டெண்டர் சட்டவிதிகளை தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் வந்தது?

நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின் பகிர்மான கழகத்திடம் இல்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் முன்கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதி கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளை தளர்த்துவது ஏன்? நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், நாங்கள் திருந்தவேமாட்டோம் என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

எச்சரிக்கை

ஆகவே டெண்டர் விதிகளை தளர்த்தி, முறைகேடுகள் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அ.தி.மு.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். ஆளத்தெரியாதவர்கள் அரசாங்க பணத்தை சூறையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டிய காலகட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதை காரணம்காட்டி, வெளிநாடுகளில் இருந்து விதிகளை தளர்த்தி நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழக அனல் மின்நிலையங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 1-ந்தேதி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையிலிருந்து விலக்கு அளித்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அவசரமாக அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது ஏன்?

இவ்வளவு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மின்நிலையங்களுக்கு வந்துசேர்ந்ததா? ஊழல் செய்ய வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதன் பின்னணி சதி பற்றி விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். எனவே, நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உள்பட பினாமி அரசின் அனைத்து துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்ட விதிகளை தளர்த்தி, தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதாக வெளிவந்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை அரசு விளக்கிட வேண்டும். நிலக்கரி கையிருப்பு 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என செய்திகள் வெளிவந்தபோது அமைச்சர் தங்கமணி நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன்பின்னர் மத்திய அரசிடம் நிலக்கரி உடனடியாக தேவைப்படுகிறது என நேரிலேயே சென்று கேட்டும் வந்தார்.

இவ்வாறு முரண்பட்ட நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டு வருவதோடு, தற்போது ஊழல் செய்வதற்காகவே இவ்வாறு சட்ட விலக்கு தந்து இக்கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த நடைமுறை தொடருமானால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு, அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி சந்தேக கேள்விகள் எழும். இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இதுபற்றிய விளக்கத்தை இந்த அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.