சிலைக்கடத்தல் விவகாரம்: ரன்வீர்ஷாவிடம் 13 நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் முறையீடு


சிலைக்கடத்தல் விவகாரம்: ரன்வீர்ஷாவிடம் 13 நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் முறையீடு
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 8:56 PM GMT)

சிலைக்கடத்தல் விவகாரம் குறித்து ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் முறையீடு செய்தார்.

சென்னை

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோரது வீடு, பண்ணை வீடுகளில் இருந்து சாமி சிலைகள், கோவில் தூண்கள் என்று மொத்தம் 247 பழங்கால கலைப்பொருட்களை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

இதையடுத்து இவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்.மாணிக்கவேல் ஆஜராகி, ‘சிலைக்கடத்தலில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனிடம் இருந்து ரன்வீர் ஷா பல சிலைகளை வாங்கியுள்ளார். இதை தீனதயாளன் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியுள்ளார். எனவே, ரன்வீர்ஷாவிடம் குறைந்தது 13 நாட்கள் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது’ என்றார்.

மனுதாரர் ரன்வீர் ஷா சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த சிலைகளை எல்லாம் விலை கொடுத்து வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது. அதை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்’ என்றார். இதையடுத்து விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story