அனைவரும் தாய்மொழியில் பேச வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு


அனைவரும் தாய்மொழியில் பேச வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 9:14 PM GMT)

அனைவரும் தாய் மொழியில் பேச வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை, 

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியின் பவளவிழா, நிர்வாக கட்டிடம் மற்றும் உள்விளையாட்டு மைய அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் முரளிதரன், நிதி அறங்காவலர் நாகராஜன் உள்பட பலர் பங்கு பெற்றனர்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்புரையாற்ற தொடங்கும்போது, தமிழில் உரையாடினார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானவை. பெண்கள் தேசத்தை கட்டமைக்க வேண்டும். பெண்கல்வியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. சமுதாய முன்னேற்றத்தில் கல்வி சிறந்த பங்கு வகிக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே உயரும். தற்போது பெண்கள் இல்லாத துறையே இல்லை.

மேற்கத்திய கலாசார மோகத்தின் விளைவாக வெளிநாட்டில் இருப்பவை தான் சிறந்தவை என்று நம்புகிறோம். அது தவறு. ராபர்ட் கிளைவ் சிறந்தவர் என்று வரலாற்றில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டில் சிறந்தவர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி, சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் போன்றோரை மறந்துவிட்டோம். நம் நாட்டில் இருக்கும் நல்ல விஷயங்களை பாதுகாக்க வேண்டும். நம்முடைய கலாசாரத்தில் எது உயர்ந்ததாக இருக்கிறதோ? அதை போற்றி பாதுகாக்க வேண்டும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை பள்ளிகளும், கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்க வேண்டும். கடின உழைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்.

பாதி நேரம் படிப்பு, பாதி நேரம் திறன் மேம்பாட்டுக்காக மாணவர்களை நேரம் ஒதுக்க செய்ய வேண்டும். இயற்கை, கலாசாரம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதன் மூலம் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.

பெற்ற தாயை மறக்கக் கூடாது. அதேபோல் தாய்மொழி, தாய் நாடு, பிறந்த ஊரையும் மறக்கக்கூடாது. வீட்டிலும், வெளியிலும் தாய்மொழியில் தான் பேச வேண்டும். தாய்மொழி கண் போன்றது, பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றது. எனவே தாய்மொழியில் பேசுவதை ஒரு போதும் மறக்கக்கூடாது.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் நமக்கு பாடம் கற்றுக்கொடுத்த குருவை ஒருபோதும் மறக்கக்கூடாது. குருவுக்கு மாற்றாக ‘கூகுள்’ வரமுடியாது. குருவை எப்போதும் மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற சென்னை மாநில கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, 1,152 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். இதில் பார்வையற்ற மாணவர் ராஜ்குமார் உள்பட 39 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கல்வி என்பது சிந்திப்பதற்கான பயிற்சியை பெறுவது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறி இருக்கிறார். சில நேரங்களில் சரியான விடைகளை பெறுவதைவிட சரியான கேள்விகளை கேட்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கல்லூரிகளில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்தால் தான் பட்டம் பெற முடியும் என்ற நிலை மீண்டும் வர வேண்டும்.

மாணவர்கள் உடற்பயிற்சியை மேம்படுத்த வேண்டும். பாரம்பரியத்தையும், காலசாரத்தையும் போற்ற வேண்டும். நிறைய செடிகள், மரங்கள் வளர்க்க வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், மற்றும் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாநில கல்லூரி முதல்வர் ராவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story