‘தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது’ வெங்கையா நாயுடு பேச்சு


‘தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது’ வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 9:28 PM GMT)

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை, 

தமிழ் வர்த்தக சங்கத்தின் பவளவிழா சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், டி.ஜெயக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் வர்த்தக சங்க தலைவர் சோழநாச்சியார் ராஜசேகர் வரவேற்றார். முன்னாள் தலைவர் எஸ்.சந்தானம் கவுரவிக்கப்பட்டார். விழாவில் சென்னை துறைமுகம், சுங்கத்துறை, வங்கி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதியில் சிறந்து விளங்கிய 40 நிறுவனங்களுக்கு தமிழ் வர்த்தக சங்கம், சோழநாச்சியார் அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

சங்க காலம் முதற்கொண்டே, தமிழர்கள் தொழில்களிலும், தொழில் முனைவதிலும் சிறந்து விளங்கினர். தமிழர்கள் வெளிநாடுகளுடன் வர்த்தக உறவு வைத்திருந்தார்கள் என்பது வரலாற்றில் பதிவாகி உள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புரட்சி காரணமாக உலகம், அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில் வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் தனியார் துறை மிகப்பெரிய பங்களிப்பை செலுத்த முடியும்.

தொழில்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்து விளங்குகிறது. வேளாண்மையிலும், ஆதார வளத்திலும் மனித ஆற்றலிலும் வளமான நிலையில் தமிழகம் உள்ளது. தமிழக மக்களின் கடுமையான உழைப்பு காரணமாக தோல் மற்றும் ஜவுளி தொழில்களில் தமிழ்நாட்டுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது.

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய நுகர்வு சந்தையாக மாற்றி, இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

குடிசை தொழில்களை ஊக்குவிப்பதால் கிராமப்புறங்கள் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாறுவதற்கும், வேலை தேடி நகரங்களை தேடி மக்கள் செல்வதை தடுப்பதற்கும் உதவும். தனியார் துறை சமூக பொறுப்புக்கான செலவினத்துடன் நின்றுவிடாமல், சமூக கடமைகளை நிறைவேற்றுவதில் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் வாய், தாடை மற்றும் முகப்பகுதி அறுவை சிகிச்சை நிபுணர்களின் 43-வது தேசிய கருத்தரங்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. டாக்டர் தீபேந்து மசூம்தர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்தரங்கில் பேசினார்.

Next Story