அ.தி.மு.க.வில் ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்


அ.தி.மு.க.வில் ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:30 PM GMT (Updated: 11 Oct 2018 9:54 PM GMT)

அ.தி.மு.க.வில் ஒரு கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை, 

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களுக்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கிக் கொண்டனர். அப்போது அவைத் தலைவர் இ.மதுசூதனனும் இணைந்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான கால அளவு 1.3.2018-ந் தேதி முதல் 31.5.2018 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 81 ஆகும். அதனடிப்படையில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆகும். பிற மாநிலங்களில் இருந்து 3 ஆயிரத்து 583 படிவங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 89 ஆயிரத்து 575 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

திரும்ப பெறப்பட்ட மொத்த படிவங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 64 ஆகும். மொத்தம் ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து இருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட 90 நாளில் நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனை ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை தலைமை கழகத்தில் செலுத்தி ரசீது பெற்ற 60 லட்சம் பேருக்கு இன்றைக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கி உள்ளது. மற்ற உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் படிப்படியாக மற்ற உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருபெரும் தலைவர்கள் இருக்கின்ற காலத்திலே உறுப்பினர் சீட்டு புதுப்பிக்கும் பணி நடைபெறும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதன் முறையாக, அ.தி.மு.கவில் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு புதுப்பிக்கின்ற பணி, புதிய உறுப்பினர்களை சேர்க்கின்ற பணி தொடங்கி, சுமார் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்களை இன்றைக்கு சேர்த்துள்ளோம்.

ஜெயலலிதா இருந்தபோது 5 ஆண்டு காலத்தில் 1 கோடிய 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இப்பொழுது இந்தப் பணி தொடங்கி, இந்தக் குறுகிய காலத்திலேயே 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 பேர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு 6 மாதத்திலே கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்கள் சேருவார்கள், புதுப்பிப்பார்கள். ஜெயலலிதா இருந்த காலத்தில் எப்படி 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தார்களோ, அதைவிட கூடுதலான உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருபெரும் தலைவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதே எங்களுடைய லட்சியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story