வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து 5 பேர் பலி; 12 பேர் காயம்


வால்பாறை அருகே 20 அடி பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து 5 பேர் பலி; 12 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:04 PM GMT (Updated: 11 Oct 2018 10:04 PM GMT)

வால்பாறை மலைப் பாதையில் நள்ளிரவில் மினிலாரி கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்த காட்டுப்பட்டி, குறுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ்மக்கள் நேற்று முன்தினம் மினிலாரியில் பொள்ளாச்சி, கோட்டூர் பகுதிகளில் உள்ள சந்தைக்கு சென்றுவிட்டு, அதே மினி லாரியில் தங்களது கிராமங்களுக்கு திரும்பினர். மினிலாரியில் மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர். இதில் பலர் லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தனர்.

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் காடம்பாறை மலைப்பாதையில் மினி லாரி சென்று கொண்டிருந்தது. மினிலாரியை டிரைவர் ராஜன் (வயது 40) என்பவர் ஓட்டினார். நள்ளிரவு 11 மணி அளவில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது மினி லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள பாறைகளில் மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

5 பேர் பலி- 12 பேர் படுகாயம்

இதில் சம்பவ இடத்திலேயே செல்வி (40), மல்லப்பன் (40) ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களில் வெள்ளையன் (45), ராமன் (45), தன்னாசி (34) ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் ராஜன், குருமலையை சேர்ந்த திருமன் (45) உள்பட 12 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிவேகமாக மினி லாரியை ஓட்டியதும், லாரியில் பின் பகுதியில் நின்று கொண்டு பயணம் செய்ததால் அதிக பாரத்தால் பின்பகுதி கீழே இழுத்ததும் தான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

டிரைவர் பேட்டி

விபத்தில் காயம் அடைந்த மினி லாரி டிரைவர் ராஜன் கூறுகையில் ‘மலைப்பாதையில் வளைவான பகுதியில் பள்ளத்தில் லாரி ஏறி இறங்கி வேண்டியது இருந்தது. இதனால் பிரேக் போட்டு லாரியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் திடீரென்று பயங்கர சத்தத்துடன் லாரி பள்ளத்தில் இறங்கியது. நானும் லாரிக்குள் மாட்டிக்கொண்டேன்’ என்றார்.

Next Story