குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை


குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:45 PM GMT (Updated: 11 Oct 2018 10:08 PM GMT)

குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை,

தமிழக போலீஸ் துறையை உலுக்கியுள்ள ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மதுரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.

பின்னர் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், குட்கா விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு நிறைய விவரங்கள் தெரியும் என்றும், அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியபோது மாதவராவின் குட்கா குடோனில் சோதனை நடத்தியது பற்றி தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அப்போது பதில் அளித்த ஜெயக்குமார், குட்கா விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் விசாரணையை சந்திக்க தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குட்கா குடோனில் முதன்முதலாக சோதனை நடத்திய அதிகாரி என்பதால் ஜெயக்குமாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயக்குமாருக்கு நேற்று முன்தினம் அவர்கள் சம்மன் அனுப்பினர்.

அதன்படி நேற்று அவர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ‘சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை சுமூகமாக நடந்தது. கேட்ட கேள்விகளுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளேன். நாளையும் (இன்று) என்னிடம் விசாரணை நடத்த உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மேலும் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை துணை இயக்குனர் ஷியோரனிடமும் நேற்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் சென்னையில் மத்திய கலால் துறை உதவி இயக்குனராக பணியாற்றிய போது, குட்கா ஊழல் வழக்கில் இவருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்பேரில் ஷியோரனிடம் விசாரணை நடந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story