வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Oct 2018 8:36 PM GMT (Updated: 12 Oct 2018 8:36 PM GMT)

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், பொதுமக்களின் இறுதியானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாக பயன்படுத்தக்கூடிய இடமாகும்.

ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும், சூழ்ச்சிகளையும் செய்துவருகிறார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளை களைவதில் உரிய வேகமும் போதிய அக்கறையும் காட்டப்படவில்லை. அதனால், மகேசன் தீர்ப்புக்கு நிகரானதும் மேலானதுமான மக்கள் தீர்ப்பையே மாற்றிவிடக்கூடிய தில்லுமுல்லுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ள நினைக்கிறார்கள்.

விழிப்புடன் இருங்கள்

இதனை தடுத்துநிறுத்திட நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பு தான் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம். அடுத்தவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, மோசடி செய்வதற்கு ஆளுந்தரப்பு அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் நிலையில், தி.மு.க.வினர் விழிப்புடன் இருந்து, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஊன்றிக் கவனிப்பதுபோல, இந்த முகாம்களில் செயல்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு தொகுதியும் நம்முடைய தொகுதி என்கிற எண்ணத்துடன், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அதில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் வெளிப்பட வேண்டும். கடைசி முகாம் நடைபெறும் 14-ந் தேதி (நாளை) தி.மு.க.வினர் மிகுந்த விழிப்போடு இருந்து அந்த பணியினை மேற்கொள்ள வேண்டும்.

முதல் வாக்குகள்

புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்திட தி.மு.க. முகவர்கள் துணைநிற்க வேண்டும். அவர்கள் முதன்முதலாக பதிவு செய்யும் வாக்குகள் உதயசூரியனுக்கு பதிவாகி, தமிழ்நாட்டில் புதிய விடியல் ஏற்படும் வகையில் தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும்.

தேர்தல் அரசியல் களத்தில் உலைபொங்கி, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட வேண்டுமென்றால், அதற்கு முன்பாக நெல் விளையும் வயல் போன்ற வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் எனும் களைகளை நீக்கி, புதிய வாக்காளர்கள் எனும் உரமிட்டு, பயிர் வளர்ப்பது தான் நாம் தற்போது மேற்கொள்ள வேண்டிய சமுதாய பணி. அதனை சரிவர செய்தால்தான், விளைச்சல் வீண்போய்விடாமல் வெற்றியினை அறுவடை செய்திட முடியும். அரசியல் களத்தில் பெறுகின்ற வெற்றியை தமிழ் சமுதாயத்தின் நலனுக்கும் உயர்வுக்கும் பயன்படுத்துவதே கருணாநிதி நமக்கு காட்டியுள்ள பாதை.

கவனம் வேண்டும்

வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும், நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினை பாதிக்கும். இளையான்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரேயொரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கருணாநிதி பலமுறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அந்த விழிப்புணர்வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும். இன்றைக்கு நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக்கரை சேர்க்கும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story