அனைவருக்கும் வீடு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி பாராட்டு


அனைவருக்கும் வீடு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி பாராட்டு
x
தினத்தந்தி 12 Oct 2018 9:02 PM GMT (Updated: 12 Oct 2018 9:02 PM GMT)

அனைவருக்கும் வீடு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் ‘ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் (ரெரா)-ரியல் எஸ்டேட்டில் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைதன்மையின் புதிய அத்தியாயம்’ என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மண்டல பயிலரங்கத்தை நடத்தியது. இதில், தமிழக அரசின் வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றுபேசினார்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் பொருளாதார ஆலோசகர் அனுபம் மிஸ்ரா, செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பி.ராஜேந்திரன் உள்பட புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், கட்டுமான அதிபர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

முன்னுரிமை

நாடாளுமன்றத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா நிறைவேறியபோது தமிழக அரசு அதனை ஆதரித்தது. தமிழகத்தில் 2023-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் வழங்கி, குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்பது ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் ஆகும். அந்தவகையில் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

வீட்டு வசதிக்கான விலையை குறைக்கும் வகையில் தரை கட்டுமான பரப்பளவு (எப்.எஸ்.ஐ.) அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தரை கட்டுமான பரப்பளவு 1.5 சதவீதத்தில் இருந்து 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13.91 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையானதாக இருந்தது. இதில் 4.88 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

கூட்டு பங்களிப்புடன் கூடிய மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்குகிறது. மீதம் உள்ள தொகை பயனாளிகள் செலவிடவேண்டியது உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் கட்டுமானத்துக்கு செலவிடும் தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராட்டு

மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி பேசும்போது, “ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் இதுவரையிலும் 32 ஆயிரத்து 500 ரியல் எஸ்டேட் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 25 ஆயிரம் ரியல் எஸ்டேட் முகவர்கள் பதிவு செய்துள்ளனர். தெற்கு மண்டலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் சென்னையில் நடந்ததுபோல, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடர்பான பயிலரங்கம் வடகிழக்கு மாநிலங்களிலும் விரைவில் நடத்தப்படும். பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது. இதற்காக தமிழக அரசுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

முரண்பாடு

இதையடுத்து ஹர்தீப் சிங் புரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிறைய மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்கள் இல்லை. தமிழகத்திலும் தற்காலிக தலைவர் தான் செயல்படுகிறார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டம் வந்து ஒரு வருடத்துக்கு பின்னர் தான் தமிழகத்தில் அது அமல்படுத்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை பொறுத்தமட்டில் மத்திய அரசு வகுத்த விதிமுறைகளுக்கும், மாநில அரசு வகுத்த விதிமுறைகளுக்கும் முரண்பாடுகள் இருக்கிறது.

இது பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை. திட்டங்களை மாநில அரசுகள் மாற்றியமைத்து செயல்படுத்துகிறார்கள். 2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை விரைவில் நிதி ஒதுக்க வாய்ப்பு இருக்கிறது. மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் இருந்து 15 மீட்டர் சுற்றளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story