மாநில செய்திகள்

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றிய கவர்னர் + "||" + Governor removed garbage from Thoothukudi bus station

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றிய கவர்னர்

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றிய கவர்னர்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குப்பைகளை அகற்றினார்.
தூத்துக்குடி, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நேற்று காலையில் கார் மூலம் தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.

இதன்பின்பு தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்ற அவர் அங்கு உள்ள ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்துக்கு சென்று அங்கு இருந்த குழந்தைகளுக்கு பழங்களையும், பூக்களையும் வழங்கி அவர்களிடம் உரையாடினார்.

மேலும், பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்துக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

பின்பு பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மாணவர்களிடம் கூறுகையில், ‘மாணவர்கள் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

வீட்டில் தூய்மைப்படுத்தும் பணியில் வீட்டில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். நகரத்தை தூய்மையாக மாற்றுவதற்கு பத்திரிகையாளர்களுக்கும் பொறுப்பு உள்ளது. நானும் பத்திரிகையாளர்தான். தூய்மை பணி செய்வதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும்’ என்றார்.

தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை கவர்னர் ஆங்கிலத்தில் வாசிக்க, மாணவர்கள் அதையே திரும்ப கூறினர். பின்னர் ஒரு மாணவி உறுதிமொழியை தமிழில் கூறினார். அந்த மாணவியை, சிறந்த நிர்வாகியாக வருவார் என்று கவர்னர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்பு அங்கிருந்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு சென்ற கவர்னர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார். அங்கு உள்ள கடைகளின் முன்பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்ட அவர் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். இதனையடுத்து தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுற்றுலா மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இருப்பதை அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். சுமார் 362 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னரிடம் மனு கொடுத்தனர். பின்பு நேற்று மாலை அவர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.