சென்னை மயிலாப்பூரில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிறுவனர் தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப பிரச்சினையால் விபரீதம்


சென்னை மயிலாப்பூரில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிறுவனர் தூக்குப்போட்டு தற்கொலை குடும்ப பிரச்சினையால் விபரீதம்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:52 PM GMT (Updated: 12 Oct 2018 9:52 PM GMT)

சென்னை மயிலாப்பூரில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிறுவனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியந்தது.

அடையாறு, 

சென்னை அண்ணா நகர், அடையாறு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ‘சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’ என்ற பெயரில், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் நடத்தி வந்தவர், சங்கரன்(வயது 45). மயிலாப்பூர் கிருஷ்ணசாமி அவென்யூவில் தனது மனைவி வைஷ்ணவி, மகள்கள் சஹானா, சாதனாவுடன் வசித்து வந்தார். இவர்களுடன் சங்கரனின் மாமனாரான நடிகர் தீனதயாளனும் வசித்து வருகிறார்.

சில நாட்களாக மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த சங்கரன், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், வீட்டுக்கு வந்தார்.

அப்போது கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கணவருடன் கோபித்துக்கொண்டு வைஷ்ணவி, தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த சங்கரன், தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

சங்கரனை சமாதானப் படுத்த அவரது வீட்டுக்கு வந்த அவருடைய நண்பர், பலமுறை அழைத்தும் பதில் ஏதும் வரவில்லை. இதனால் அவர், தாழ்ப்பாள் போடாமல் சாத்தப்பட்டு இருந்த படுக்கை அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சங்கரன், தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய சங்கரனை மீட்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினை

இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சங்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் சங்கரன், குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முதல் மாணவராக உயர்ந்தார்

தற்கொலை செய்துகொண்ட சங்கரனின், ‘சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’ என்ற பயிற்சி மையத்தின் மூலம் இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட அரசின் பல்வேறு பணிகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் கிராமத்தில் பிறந்த அவர், ஊத்தங்கரையில் 8-ம் வகுப்பு வரை படித்தார். பிறகு நல்லாக் கவுண்டம்பாளையத்தில் இருந்த தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே ஈடுபாட்டுடன் படித்து பள்ளியின் முதல் மாணவராக உயர்ந்தார்.

கிள்ளிகுளத்தில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி(விவசாயம்) படித்தபோது, கல்லூரியில் நடந்த ஒரு ‘ராக்கிங்’ பிரச்சினையில் சிக்கி ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

காதல் திருமணம்

யாரால் புகார் அளிக்கப்பட்டு கல்லூரியில் இருந்து ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டாரோ, அதே பெண்ணான வைஷ்ணவியை 11 வருடங்கள் காதலித்து, 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பல குரல்களில் பேசுவது (மிமிக்ரி) மற்றும் நடிப்பில் திறமைசாலியாக இருந்த அவர், சென்னையில் சுமார் 1½ வருடம் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரியானாவில் எம்.எஸ்சி.(விவசாயம்) படித்து முடித்தார்.

ஐ.ஏ.எஸ். கனவு

ஐ.ஏ.எஸ். ஆகும் கனவுடன் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்க டெல்லி சென்றார். டெல்லியில் வைஷ்ணவிக்கு வேலை கிடைத்தது. அவரது உதவியுடன் 2001, 2002 ஆகிய கால கட்டத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி இறுதி தேர்வு வரை சென்றும் வெற்றியடைய முடியவில்லை.

4 முறையும் தோல்வி அடைந்த நிலையில், அவரது தந்தை தேவராஜ் இறந்ததால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். பின்னர் தான் சிவில் சர்வீஸ் தேர்வில் அடைந்த தோல்விகளால் கிடைத்த அனுபவத்தை வைத்து, ஒரு பயிற்சி மையம் தொடங்க முடிவு செய்தார்.

அதன்படி 2004-ம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் ‘சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’ என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கினார்.

மாணவர்கள் சோகம்

“ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ். ஆகி இருப்பேன். ஆனால் நான் தேர்வில் தோல்வி அடைந்ததால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்” என்று சங்கரன் எப்போதும் பெருமையாக கூறுவார்.

சங்கரன், தன்னிடம் பயிற்சிபெற வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து உள்ளார்.

அவரிடம் பயிற்சி பெற்று உயர் அரசு பொறுப்பில் உள்ளவர்களும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடலுக்கு அஞ்சலி

அவரது மரண செய்தி அறிந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் ஊத்தங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்து சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அண்ணாநகரில் உள்ள அவரது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சங்கரனின் உடலுக்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் பயிற்சி மையத்தின் முன்னாள் மாணவர்கள், தற்போது பயிலும் மாணவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சங்கரனின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சங்கரனின் உடலுக்கு நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், நடிகர் ஆரி, இயக்குனர் சற்குணம், நக்கீரன் கோபால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல்

சங்கரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தென்னாட்டு ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் ஐ.ஏ.எஸ். கனவுகளை நனவாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது. அவரது குடும்பத்துக்கு பா.ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறி இருந்தார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் செயல்பட்டு வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் சங்கரன் அகால மரணம் அடைந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஊத்தங்கரையில் எளிமையான குடும்பத்தை சேர்ந்த சங்கர், தனது கடின உழைப்பால் முன்னேறியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக வரவேண்டும் என்று கனவு கொண்டிருந்த அவர், அது நனவாகாத நிலையில், பயிற்சி மையம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணம் இன்றி பயிற்சி போட்டித்தேர்வுகளில் நுணுக்கங்களை விளக்கி அவர்கள் வெற்றிக்கு வழி வகுத்தவர். சமூக நீதியில் அக்கறை கொண்ட அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்” என கூறி இருந்தார்.

Next Story