மலை ஏறுபவர்கள் வழிகாட்டியை அழைத்துச்செல்ல வேண்டும் அரசு புதிய விதிமுறை அறிவிப்பு


மலை ஏறுபவர்கள் வழிகாட்டியை அழைத்துச்செல்ல வேண்டும் அரசு புதிய விதிமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2018 10:23 PM GMT (Updated: 12 Oct 2018 10:23 PM GMT)

மலையேறுபவர்கள் வழிகாட்டியை அழைத்துச்செல்ல வேண்டும் என்று அரசு புதிய விதிமுறையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, 

அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம், கொட்டக்குடி காப்புக்காட்டில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சிக்கி உயிரிழக்க நேரிட்டது. அதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. விசாரணை அலுவலர் ஆய்வு செய்து வருங்காலங்களில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளார்.

அதன்படி மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர், வன உயிரின காப்பாளர், துணை இயக்குனரின் முன்அனுமதியை பெற்றிடல் வேண்டும்.

கட்டண விகிதம்

மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமான பாதை, கடினமான பாதை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.200 வீதமும், மிதமான பாதைக்கு ரூ.350 வீதமும், கடினமான பாதைக்கு ரூ.500 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.1,500 வீதமும், மிதமான பாதைக்கு ரூ.3 ஆயிரம் வீதமும், கடினமான பாதைக்கு ரூ.5 ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டி

எளிதான பாதை, மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் (தலா 5 நபர்கள்) தங்களுடன் ஒரு வழிகாட்டியையும், கடின பாதையில் ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச்செல்ல வேண்டும். வனத்துறையில் பதிவு செய்யாத எந்த நிறுவனமோ, சங்கமோ, அமைப்போ மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது.

மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தட பயன்பாடு, மலையேறும் நேரம் ஆகியவைகளையும் உள்ளடக்கி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, சுற்றுலா பயணிகளும், மலையேற்ற பயிற்சி மேற்கொள்வோரும் இவ்விதிகளை கடைபிடிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story