மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் போலசென்னை-மதுரை இடையே பகல் நேர விரைவு ரெயில் இயக்க திட்டம் + "||" + Chennai-Madurai daytime express train

வைகை எக்ஸ்பிரஸ் போலசென்னை-மதுரை இடையே பகல் நேர விரைவு ரெயில் இயக்க திட்டம்

வைகை எக்ஸ்பிரஸ் போலசென்னை-மதுரை இடையே பகல் நேர விரைவு ரெயில் இயக்க திட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் போல சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.
சென்னை, 

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஷ்தா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நிதி ஆண்டில் (செப்டம்பர் மாதம் வரை) தெற்கு ரெயில்வே ரூ.4,434.14 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டைவிட 14.94 சதவீதம் அதிகம். அதேபோல ரெயில் பயணிகளின் எண்ணிக்கையும் 3.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் மட்டும் 17.735 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு இருக்கின்றன.

945 முன்பதிவு ரெயில்கள், 1,961 முன்பதிவில்லா ரெயில்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. 2,559 பெட்டிகள் ரெயில்களில் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் 1 லட்சத்து 9 ஆயிரம் இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா ரெயில்வேகேட்

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை, மதுரை-உசிலம்பட்டி இடையேயான அகலப்பாதை பணிகள் மற்றும் கூடுவாஞ்சேரி-சிங்கபெருமாள் கோவில், மேச்சேரி ரோடு-மேட்டூர் அணை இடையேயான இரட்டை ரெயில் பாதை திட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை இடையே 3-வது வழித்தடம் மற்றும் கொருக்குப்பேட்டை-திருவொற்றியூர் இடையேயான 4-வது வழித்தட பணிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தெற்கு ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஞ்சியிருந்த 311 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் கடந்த 30-ந் தேதியுடன் மூடப்பட்டன. எனவே தெற்கு ரெயில்வேயில் ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் இல்லை.

பயோ-டாய்லெட்

46 ரெயில்களில் நவீன எல்.எச்.பி. ரக பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரெயில்களில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் புனரமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 5,263 ரெயில் பெட்டிகளில் 19 ஆயிரத்து 728 ‘பயோ-டாய்லெட்’கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ-டாய்லெட்’ வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில் நடைபெற்ற 305 குற்ற சம்பவங்களில் 352 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7.97 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. ரெயில்வே விதிகளை மீறிய 143 பேரிடம் இருந்து ரூ.1.98 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடக்கிறது

புதிய ரெயில்வே திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன. வைகை எக்ஸ்பிரஸ் போலவே சென்னை- மதுரை இடையே பகல் நேர விரைவு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. சென்னையில் மின்சார ரெயில்களில் முதல் வகுப்பு பெட்டியில் போலீசார் மற்றும் இதர அதிகாரிகள் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது குறித்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

ரெயில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் திருநங்கைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். சென்னையில் பறக்கும் மின்சார ரெயில் போக்குவரத்தை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையையொட்டி 42 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப் பட்டு உள்ளன. தீபாவளி தினத்தன்று மேலும் 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ரெயில் பார்ட்னர்’ செயலி

முன்னதாக ரெயில் வரும் தகவல், இருக்கை விவரம், பி.என்.ஆர். விவரம், பல்வேறு உதவி எண்கள் மற்றும் பல சேவைகளை உள்ளடக்கிய ‘ரெயில் பார்ட்னர்’ எனும் புதிய செல்போன் செயலியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஷ்தா அறிமுகப்படுத்தினார். செயலி குறித்த விவரங்களை தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பிரியம்வதா விஸ்வநாதன் விளக்கினார்.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி, தலைமை வணிக மேலாளர் (பயணிகள் சேவை) வினயன், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தனஞ்செயன் ஆகியோர் உடன் இருந்தனர்.