மாநில செய்திகள்

ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை + "||" + To Apollo doctor Commission Inquiry

ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை

ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை
ஜெயலலிதா பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரேமான்ட் டோமினிக் சேவியோ, இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் கார்த்திகேசன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.

மருத்துவர் ரேமான்ட் தனது சாட்சியத்தில், ‘22.9.2016 அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, நான் உடன் சென்றேன். ஓரளவுக்கு நினைவுடன் இருந்த போதிலும் ஜெயலலிதா அந்த சமயத்தில் பேசும் நிலையில் இல்லை’ என்று கூறினார்.

வீடியோ காட்சி

இதையடுத்து, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மருத்துவர் ரேமான்டுக்கு ஆணையத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோவை பார்த்து முடித்த பின்பு ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘இந்த வீடியோவை பார்க்கும்போது ஜெயலலிதா மெதுவாக நடந்து வருகிறார். ஒருவர் நடந்து வருவதை பார்த்து அவருக்கு இருக்கும் நோயை கண்டறியும் தேர்வு மருத்துவ படிப்பில் உள்ளது. ஜெயலலிதா குனிந்தபடி மெதுவாக நடந்து வருவதன் மூலம் அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் ரேமான்ட், அப்போதே ஜெயலலிதாவுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

நோய் பாதிப்பு இருந்ததா?

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவருக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்தும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

மருத்துவர் கார்த்திகேசன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று அவரது இதய துடிப்பை பரிசோதித்தேன். இதய துடிப்பு சரியாக இருந்தது. இதன்பின்னர் சீராக இல்லாத காரணத்தினால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது’ என்று கூறினார்.

***
சென்னை துறைமுகம் முதன்மை பெற

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும்
பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை துறைமுகத்தில் புதியதாக அமைப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தையும், அதனை மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் திறந்து வைத்ததையும் படத்தில் காணலாம். அருகில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளார்.
சென்னை, அக்.13-

சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

துறைமுக தின விழா

சென்னை துறைமுக தின விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணிகள் முனையம் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தை திறந்துவைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை துறைமுக தலைவர் ப.ரவீந்திரன், சுற்றுலாதுறை ஆணையர் வி.பழனிகுமார், சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தின் மொத்த பரப்பளவு 2 ஆயிரத்து 880 சதுர மீட்டர் ஆகும். 17 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த முனையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் பறக்கும் சாலை

விழாவில், சிறப்பாக பணிபுரிந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை துறைமுகம் பெரிய துறைமுகமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் நிகர லாபம் ரூ.6 கோடியாக இருந்தது. தற்போது இதன் நிகர லாபம் ரூ.230 கோடியாக உயர்ந்து உள்ளது.

இந்தியாவின் முதன்மை துறைமுகமாக இதனை கொண்டு வர சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை உயிர்பெற செய்ய வேண்டும்.

ஆலோசனை கூட்டம்

இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக துறைமுக அதிகாரிகள், சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

கூடிய விரைவில் இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்று நம்புகிறேன். தமிழக சுற்றுலா துறையானது கன்னியாகுமரி, ராமேசுவரம், மணப்பாடு, மகாபலிபுரம் வரை பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

அந்த திட்டத்தை திருவனந்தபுரம் கோவளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்சிடம் தெரிவித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகம் முதல் இடம்

மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் கூறுகையில், ‘உலக அளவிலான சுற்றுலாத்துறையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது இந்தியா 65-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 2-வது இடத்திலும், உள்நாட்டு சுற்றுலாத்துறையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை முதல் கன்னியா குமரி வரையிலான கடல்வழி பயணிகள் போக்குவரத்து உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.