சென்னை மாணவி பாலியல் புகார்: கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு


சென்னை மாணவி பாலியல் புகார்: கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Oct 2018 8:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:03 PM GMT)

சென்னை மாணவி கூறிய பாலியல் தொல்லை புகாரின் பேரில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மீது புகார் கூறினார். மேலும் இதற்கு விடுதி காப்பாளர்களான 2 உதவி பேராசிரியைகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 உதவி பேராசிரியைகள் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் கூறிய மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகம் திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்றம் செய்தது. அதனை அந்த மாணவி ஏற்கவில்லை. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் அந்த மாணவியை கடந்த 3-ந் தேதி கல்லூரியில் இருந்து நீக்கம் செய்தது.

6 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் பாலியல் புகாருக்கு ஆளான அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், விடுதி காப்பாளர்களான 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீது போலீசார் மானபங்கம், கொலைமிரட்டல், அவதூறாக பேசுதல் என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story