மாநில செய்திகள்

‘நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்’எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி + "||" + Actor Vijay can come to politics SA Chandrasekar interview

‘நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்’எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

‘நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்’எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
‘ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கும் தகுதி நடிகர் விஜய்க்கு உள்ளது. அவர் அரசியலுக்கு வரலாம்’ என்று அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
பாபநாசம், 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி, சினிமா டைரக்டரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று பாபநாசம் வந்தார். அங்கு அவர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் பாபநாச சாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதங்களைவிட சிறந்தது மனிதநேயம். மனிதம் தான் நிலையானது. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் மனிதநேயம்.

இந்தியன்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது. அதேபோல் நாட்டை ஆளும் தலைமைக்கும் கடமை உள்ளது. பிறப்பால் நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் முதலில் நான் இந்தியன். இந்தியன் என்றால் இந்து. மதம் என்பது இரண்டாவதுதான்.

நான் 69 படங்கள் இயக்கி உள்ளேன். கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்தார். கடவுளை நாம் எந்தவிதத்தில் பார்க்கிறோமோ அந்தவிதத்தில் அவர் நமக்கு அருள் பாலிப்பார். ஆன்மாவை சுத்தப்படுத்துவதே ஆன்மிகம்.

நடிகர் விஜய் அரசியல் பற்றி பேசினால் சிலருக்கு ஏன் எரிகிறது? அவர் அரசியலுக்கு வருவதும், வேண்டாம் என்று நினைப்பதும் அவருடைய முடிவு. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வரலாம். ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும். அதை கொடுக்கக்கூடிய தகுதி விஜய்க்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.