முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணம் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி


முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மரணம் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 13 Oct 2018 9:27 PM GMT (Updated: 13 Oct 2018 9:27 PM GMT)

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, 

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை பரிதி இளம்வழுதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 58.

அவரது உடல் பெசன்ட் நகர், 5-வது அவென்யு, 35-வது குறுக்குத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் அஞ்சலி

மரணம் அடைந்த பரிதிஇளம்வழுதியின் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழ் மாநில கட்சி தலைவர் வக்கீல் பால் கனகராஜ், நடிகர் செந்தில், தமிழ்நாடு வியாபாரி சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உள்பட ஏராளமானோர் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருவல்லிக்கேணி அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பரிதி இளம்வழுதிக்கு 3 மனைவிகள். முதல் மனைவி எஸ்.எம்.லலிதாவுக்கு (இறந்து விட்டார்) திலீபன்(இறந்து விட்டார்), இந்திரஜித் என்ற 2 மகன்களும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். 2-வது மனைவியான உதயகுமாரிக்கு பரிதி இளம்சுருதி என்ற மகனும், அனு யாழினி என்ற மகளும், 3-வது மனைவியான எலிசபெத்துக்கு ப்ரீத்தி பரிதி என்ற மகளும் உள்ளனர்.

6 முறை தேர்வானவர்

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி தி.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளராக இருந்த இளம்வழுதியின் மகன் ஆவார். இவர் தி.மு.க.வில் இருந்த போது 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தனது 25-வது வயதில், 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் பெரும் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவை பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தி.மு.க. வேட்பாளராக 5 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். இவர் 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக பணிபுரிந்தவர். 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர்.

அ.தி.மு.க.வில் இணைந்தார்

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோல்வி அடைந்தார். பின்னர், தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பின்னர், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தற்போது டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரஜித், வீர அபிமன்யு

அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருமை நண்பர் பரிதி இளம்வழுதியின் மறைவு ஒரு மிகப்பெரிய துயரத்தை எனக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கே ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. சிறுவயதிலேயே தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு என்னோடு நெருங்கி பழகி தி.மு.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு என்னோடு ஒவ்வொரு முறையும் சிறைக்கு வந்தவர் நண்பர் பரிதி இளம்வழுதி. 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும், அவரது தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி ஒரு நற்பெயரை எடுத்தவர்.

அதுமட்டுமல்ல, தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர். இன்னும் தலைவர் கருணாநிதியால் இந்திரஜித் என்றும் வீர அபிமன்யு என்றும் பாராட்டு பெற்றவர். பரிதி இளம்வழுதியை தலைவர் கருணாநிதி ஒரு செல்லப்பிள்ளையாகவே வைத்திருந்தார்.

பரிதி இளம்வழுதி மறைந்து விட்டார் என்கிற செய்தி கேட்டு வேதனைப்பட்டேன். அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சகோதரர்கள், பிள்ளைகளுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடித்தட்டு மக்களுக்கு இழப்பு

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பரிதி இளம்வழுதியின் மறைவு தமிழ் சமுதாயத்துக்கு பேரிழப்பு. கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்து தனது லட்சியத்துக்காக இறுதி வரை போராடிய போராளி. அவரது மறைவு அடித்தட்டு மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஒரு மனிதன் கொண்டுள்ள கொள்கையில் எப்படி உறுதியோடு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது ஆன்மா நற்கதி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

களம் காணும் நேரம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட இயக்க உணர்வு கொண்டு அஞ்சாமல் பாடுபட்டு வந்த தலைசிறந்த சொற்பொழிவாளர் மறைந்துவிட்டார். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுவாக களம் காண வேண்டிய நேரத்தில், தி.மு.க.வை வளர்க்க காலம் எல்லாம் பாடுபட்ட பரிதி இளம்வழுதியின் மறைவு திராவிட இயக்கத்துக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

பாசத்துடன் பழகுபவர்

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பரிதி இளம்வழுதி கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு பாசத்துடன் பழகுபவர். எளிமையானவர், ஏழை, எளிய மக்களுக்கு எப்போதும் உதவுபவர். கடின உழைப்பாளி. கொள்கை துடிப்புடன் மக்கள் பணியாற்றுபவர். அவருடைய இளம் வயதில் ஏற்பட்டுள்ள மரணம் அவருடைய குடும்பத்துக்கு மட்டுமன்றி தமிழக சமுதாயத்துக்கும் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்வு செய்யப்பட்ட பரிதி இளம்வழுதி மாரடைப்பால் உயிர் இழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story