சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல்


சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Oct 2018 11:45 PM GMT (Updated: 13 Oct 2018 9:55 PM GMT)

சென்னை கொளத்தூரில் கள்ளநோட்டுகள் தயாரித்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி 3-வது தெருவில் மருந்து கடை நடத்தி வருபவர் கன்னிமரியாள். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், மருந்துகளை வாங்கிக்கொண்டு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்.

அது கள்ளநோட்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த கன்னிமரியாள், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த அமைந்தகரை போலீசார், அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

ரூ.36 ஆயிரம் பறிமுதல்

அதில் அவர், சென்னை சைதாப்பேட்டை மேற்குஜோன்ஸ் சாலையை சேர்ந்த வனிதா(வயது 30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.36 ஆயிரத்துக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கொளத்தூரை சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகர் ஒருவர் தனக்கு இந்த கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தார். அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை செய்தனர்.

தொழிலில் நஷ்டம்

அதில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சத்யலட்சுமி என்ற பெண்ணுடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் சேர்ந்து சென்னை அண்ணாநகரில் தெரு ஓரத்தில் உணவுக்கடை நடத்தி வந்தனர். மேலும் மெத்தை மற்றும் தலையணைகளும் விற்பனை செய்து வந்தனர்.

அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பணத்தேவை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன செய்வது? என்று யோசித்தபோது, “யூ டியூப்பில்” கள்ளநோட்டுகள் அச்சடிப்பது எப்படி? என்ற வீடியோவை பார்த்தனர்.

அதன்படி ரூ.2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடிப்பது எப்படி? என்று பார்த்துவிட்டு அதன்படியே கொளத்தூரில் உள்ள சத்யலட்சுமி வீட்டில் வைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகளை தயாரித்தனர்.

புழக்கத்தில் விட்டனர்

அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு இடங்களில் உள்ள கடைகளுக்கு சென்று அவசரமாக பொருட்கள் வாங்குவது போல் நடித்து, புழக்கத்தில் விட்டு உள்ளனர்.

போலீசாரிடம் பிடிபட்டால் முக்கிய பிரமுகர்களின் பெயரை கூறினால் போலீசார் கைது செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று கருதியே, பிடிபட்ட வனிதாவும் அந்த கள்ள நோட்டுகளை கொடுத்ததாக அ.தி.மு.க, பிரமுகரின் பெயரை கூறி இருப்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

2 பெண்கள் கைது

இதையடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்ததாக வனிதா மற்றும் அவருடைய தோழி சத்யலட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொளத்தூரில் உள்ள சத்யலட்சுமி வீட்டில் இருந்து கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரம், பணம் நகல் எடுக்க பயன்படுத்திய பேப்பர்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் அ.தி. மு.க பிரமுகரின் பெயரை வனிதா கூறி உள்ளதால் அந்த பிரமுகரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story