வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்


வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:00 PM GMT (Updated: 14 Oct 2018 8:26 PM GMT)

சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானம் மீண்டும் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி செல்ல தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, இருக்கையின் அடியில் 6 தங்க கட்டிகள் கொண்ட பார்சல் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் இருந்த ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மும்தாஜ் பேகம்(வயது 41) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 224 கிராம் கொண்ட 3 தங்க சங்கிலிகளை கைப்பற்றினார்கள்.

மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த அலி நூர்முகமது (47) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த பர்சில் இருந்து 3 சிறிய தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். ரூ.7 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நாதன்(40) என்பவரின் உடைமைகளில் இருந்து 2 தங்க கம்பிகள், 19 தங்க மோதிரம், 1 தங்க செயின், 6 தங்க மீன் டாலர்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 312 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த விநாயகம்(40) என்பவர் உடைமைகளில் வைத்திருந்த காலணியில் 2 தங்க கம்பிகள், 21 தங்க மோதிரங்கள், 6 தங்க மீன் டாலர்கள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 207 தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.50 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 563 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

Next Story